வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் வ.உ.சிதம்பரனார் மிக சிறந்த...
வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம்வ.உ.சிதம்பரனார் மிக சிறந்த சுதந்திர போராட்ட தியாகி என்பதை அறிவோம். அவர் ஒரு இலக்கியவாதி என்பதை இளைஞர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சிறந்த எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தவர். மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுய சரிதம் போன்ற நூல்களை எழுதி இருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்களுக்கு உரையும் எழுதி இருக்கிறார்.
‘ஜேம்ஸ் ஆலன்’ எழுதிய 4 ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து உள்ளார். சிறைவாசத்தில் இருந்த போது, அவரது சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் முதன்முறையாக சுயசரிதையை கவிதை நடையில் எழுதியது, வ.உ.சி.தான்!
அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று கூட சொல்லலாம். அவரது குடும்ப வரலாறு, அக்கால சிறைக்கொடுமை, அவரது கப்பல் வணிகம் போன்ற அனுபவங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.
1895-ல் திருச்செந்தூர் சுப்பிரமணியம் பிள்ளை என்பவரின் மகள் வள்ளியம்மையை திருமணம் செய்தார். 6 ஆண்டுகள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். துரதிருஷ்டவசமாக 1901-ம் ஆண்டு வள்ளியம்மை இறந்துவிட்டார். தேசத்தின் மீது மட்டுமின்றி தன்னுடைய மனைவி மீதும் மாறாத அன்பு கொண்டிருந்தவர், வ.உ.சி. 6 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அன்பு மனைவி வள்ளியம்மையை பற்றி 215 வெண்பாக்கள் பாடினார். அதை ‘வள்ளியம்மை சரித்திரம்‘ என்ற நூலாகவும் வெளியிட்டார்.
மகாகவி பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்கள். இருவரும் நெல்லை சீமையைச் சேர்ந்தவர்கள். பாரதிக்கு எட்டயபுரமும், வ.உ.சி.க்கு ஓட்டப்பிடாரமும் சொந்த ஊர்கள். சென்னை செல்லும் போது தவறாமல் பாரதியாரை சந்திப்பதை வ.உ.சிதம்பரனார் வழக்கமாக கொண்டிருந்தார். பாரதியாரின் நண்பராக மட்டும் அல்லாது, அவரது பாடல்களுக்கு ரசிகராகவும் இருந்தார்.
சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டிய வ.உ.சி.க்கு பிரிட்டீஷ் அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அப்போது ஒரு ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுகள். எனவே 40 ஆண்டு கால ஜெயில் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அதற்கு வ.உ.சி. மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதே அந்த அற்ப காரணங்கள். இந்த கொடுமையான தீர்ப்பை பார்த்து நாடே கொந்தளித்தது. போராட்டங்கள் வெடித்தது. ஆங்கில அதிகாரிகள் கூட அதை ஏற்க தயங்கினார்கள். அந்த தீர்ப்பை வழங்கியவர், ஆங்கில நீதிபதி பின்ஹே. கடுமையான இந்த தீர்ப்பை எழுதிய அவர், தனது தீர்ப்புரையில் ஓர் இடத்தில் வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் விடுதலை வேட்கையையும் வார்த்தைகளால் வர்ணித்து இருக்கிறார்.
இதோ அந்த வரிகள்...
“சிதம்பரம் பிள்ளை பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.’’ ஆங்கிலேய நீதிபதி, பாரதியையும், வ.உ.சி.யையும் பார்த்து அந்த அளவுக்கு பயந்துள்ளார்.