மருத்துவ குறிப்புகள் எண்ணம்
(Eluthu Ennam)
மூலிகை மருத்துவம் - வேம்பு
வேம்பு இந்தியா முழுவதும் அனைவரும் நன்கு அறிந்த மரம். தென்னிந்திய மக்களால் தெய்வமாய் போற்றப்படும். சக்திக்கு உகந்த மூலிகையாக கருதப்படுகிறது .
இந்தியர்களின் வாழ்வில் தொன்மைக்காலம் முதல் பின்னி பிணைந்து வரும் ஒரு மருத்துவ விருஷம். வேப்ப மரத்தால் சுகாதார கேடுகளையும் , முருங்கை மரத்தால் பசிப் பிணியும் வராமல் தடுக்கலாம் என்பது நம் முன்னோர் கருத்து. வேப்பமரத்தின் அடியில் அமர்வதும், அதன் மேல் பட்டு வரும் காற்றை சுவாசிப்பதும் மக்களின் மனநிலையை சாந்தமாக்கும். மனம் அமைதி பெறும்.
வேம்பு இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதன் தொடக்கம், சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்துத் தொடங்கியது என்பது, ‘சிந்துவெளி மக்கள் வேப்பிலையைச் சிறந்த மருந்தாக இல்லங்கள் தோறும் பயன் படுத்தி வந்திருக்கின்றனர், என்று அறிஞர் தீட்சித் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.
தமிழுக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையான தாகவும் தலை சிறந்ததாகவும் போற்றப் பெறுகின்ற தொல்காப்பியத்துள் வேம்பும் கடுக்காயும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டதைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் எனவரும் செய்யுளுக்கு, ‘முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாது காத்து' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை வகுப்பர்.
போர்க்களத்திற்குச் செல்லும் போர்வீரர்கள், மன்னர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள அடையாளப் பூக்களைத் தங்கள் தலையில் சூடிக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.
பழந்தமிழ் வேந்தர்களான சேரன் பனம்பூவும், சோழன் ஆத்திப் பூவும்' பாண்டியன் வேப்பம் பூவும் சூடினர். இம்மூன்று பூக்களும் பூவையர் சூடுகின்ற பூக்களல்ல. இப்பூக்கள் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியனவும் அல்ல. கோடைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியதும் மருந்துப் பொருளாகக் கூடியனவுமான இவற்றின் பயன் கருதியே மன்னர்கள் தங்களின் அடையாளப் பூக்களாகக் கொண்டிருக்கின்றனர். வேம்பம்பூவின் தொடர்புவாழ்க்கை' இலக்கியம் ஆகியவற்றிலும் இடங்கொண்டிருக்கிறது எனலாம்.
மனையில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ, ஊரில் நோய்க்குறி காணப்பட்டாலோ, நோய்த் தடுப்பு முறையால் மனையையும் மனையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப் படுத்துவர். அதைப் போல வெளிப்புறமிருந்து நோய்க்கிருமிகள் மனைக்குள் புகாமல் மனையைப் பாதுகாக்கும் பொருட்டு, மனையின் முகப்பில் வேம்பின் இலைகளைக் கொத்துக் கொத்தாகச் செருகி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.
தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ - இரவ மரத்தின் இலையுடன் வேம்பு மனைகளில் செருகப்பட்டதைக் குறிப்பிடக் காண்கிறோம்.
நம் நாட்டின் சாலையோரங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. வீடுகளிலும், கோயில்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
இதன் உலர்ந்த தண்டின் பட்டைகள், இலைகள், வேர்ப்பட்டைகள் மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றன. இலைகள் கசப்பு சுவை உடையது. தோல் வியாதிகளுக்கும், பரு, கொப்புளங்கள் இவற்றை குணப்படுத்துவதில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது
அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் சிறந்த கிருமி நாசினியாக சேர்க்கப்படுகிறது. இதன் இலைகள் மற்றும் வேர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியும், தோல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும் கொண்டவை. வைரஸ், பூஞ்சை, காளான் போன்ற கிருமிகளுக்கு எதிரானவை.
காற்றில் கலந்து மிதந்து வரும் நுண் கிருமிகளால் வரும் நோய்கள், வேம்பின் இலையால் விலகும். வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்குத் தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் உடைந்து காயத் தொடங்கும். வேப்பிலையால் கிருமிகள் எல்லாம் செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். இது சீதளத்தை விரட்டி உடம்பிற்குத் தேவையான சீதோஷ்ணத்தைக் கொடுத்து சமச் சீராக உடலை வைத்துக் கொள்ளும்.
ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைபோல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர அம்மை வடு மாறும். உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய்க்கு இதன் இலைச்சாறு நல்ல மருந்து.
பசி குறைந்து உடல் மெலிந்திருப்பவர்கள் வேப்பிலை ஒரு கைப்பிடியில் பூண்டு பத்துப்பல், சீரகம் மூன்று சிட்டிகை சேர்த்தரைத்து இதை இரண்டு பகுதியாக்கி காலை, மாலை இம்மாதிரி 20 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் பிரச்னை தீரும். பசியைத் தூண்டும்.
கட்டி, படை, புண்களுக்கு பற்றாகத் தடவலாம். தண்டு நுனியிலிருந்து வெளிவரும் சாறு வலுவின்மை, தோல் வியாதிகளைப் போக்கும். குளிர்ச்சி தரும். வலுவேற்றும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை. வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.
வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும்.
வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.
மூலிகை மருத்துவம் - அறுகம்புல்
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க”
புதுமணை புகுவிழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை பார்த்திருப்பீர்கள்.
அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்
அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும்
உடையது.உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும்,குடல் புண்களை ஆற்றும்,
இரத்தை தூய்மையாக்கும்,உடலை பலப்படுத்தும்,
கண் பார்வை தெளிவுபெறும்.
அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் என்ற வேதி பொருள் உள்ளன.
அருகம்புல் வாதபித்த ஐயமோடீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகையிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை இது அகத்தியர் பாடல்.
இது புராணக்கதை மூலம் நம் முனோர் நமக்கு கட்டிய வெப்பம் குறைக்கும் வழி .
அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்.
அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி என்று வேறு பெயர்களிலும் இது அழைக்கப் படுகிறது.
போகாத தோஷவினை போகப் பிணியகன்று
தேகாதி யெல்லாஞ் செழிக்கவே ஸ்ரீ வாகாய்
அடர்தந்தை பிள்ளைக் கணியா தலாலத்
திடமாங் கணபதிபத்ரம்
அருகம்புல்லின் சமூலத்தை (இலை,வேர், தண்டு) எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து பாத்திரத்தில் உறையவைத்தால் மாவு போன்று வெண்மையாக உறையும். இந்த மாவுப்பொருள் பாலைவிட வெண்மையாகக் காணப்படும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
கண் நோய் அகல
கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.
பொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. இதனை சித்தர்கள் விஷ்ணு மூலி என்று அழைக்கின்றனர்.
சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற இந்த அருகின் மருத்துவக் குணங்களை அகத்தியர் பாலவாகடத்திலும், வர்ம நூல்களிலும் தெளிவாக விளக்கியுள்ளார்.
குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்தாக உள்ளதால் இதை குருமருந்து என்றும் கூறுகின்றனர்.
ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.
அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.
நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.
அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.
நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.
உடல் இளைக்க தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
மூலிகை மருத்துவம் - ஓரிதழ் தாமரை
மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.
இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.
நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை.
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.
இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.
இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.
உடல் வலுப்பெற
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின்பலனை அனுபவிக்க முடியும்.
சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன.
இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும். மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.
உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.
இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
மூலிகை மருத்துவம் - சிறு குறிஞ்சா எனும் சக்கரைக்கொல்லி
நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்” எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்” ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக” உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் சுரோணிதம் / எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.
இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் (நீரிழிவு நோய்) உடையவர்களுக்கு இது ஒன்றன்பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்தைகள் தோன்றுகின்றன.
இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்த 10 வது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன், பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது, கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்துவந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது.
சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது இதில் சிறு குறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.
சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பிசெல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறுகுறிஞ்சான் அதிகரிக்கிறது.
இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.
மூலிகை மருத்துவம் - தூதுவளை
வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை.
தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum;
இது வெப்பம் உண்டாக்கி, கபம் நீக்கி தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது.
வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு.
இது ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி.: வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும்.பயன் உள்ளது.
இலை கோழையகற்றும், உடல் தேற்றிக் காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.
தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.
இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும். இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.
ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்.
நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.
தூதுவேளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.
தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும் , ஆண்மை பெருகும் வலிவு கிடைக்கும்
காய் காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும்.அழற்சி தீரும் .வாயு தொந்த்தரவு தீரும். பழம் இது மார்பில் இறுகிய சளியை நீக்கும்.இருமல் மூன்று தோஷம் நீக்கும்.பாம்பின் நஞ்சு நீக்கும் .
மூலிகை மருத்துவம் - கீழாநெல்லி
தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள் . ஆனால் அணுபான முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது .கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றது. நமது சித்தர்கள் தமது சித்தத்தை அடக்கி, ஞானத்தை பெருக்கி உடம்பை வளர்த்து உயிரை வளர்க்கும் உபாயத்தை நமக்கு அன்புடன் விட்டுசென்றுள்ளனர் . ஆனால் நாம் ஆங்கிலேயரின் ஆட்ச்சியில் இருந்தபோது இததகைய பாரம்பரிய உயர் மருத்துவ முறைகளை உதாசீனப்படுத்திவிட்டோம். அவைகளை தொகுத்து வைக்க மறந்து விட்டோன். பலாயிரக்கனக்கான ஓலை சுவடிகள் படிஎடுக்கப்படாமல் ஆடிப்பெருக்கில் ஆற்றினில் விடப்பட்டது ..சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள்தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் இல்லை என்றே கூறலாம். ஒவ்வரு உள்ளுருப்பையும் பாதுகாக்க ஒவ்வரு மூலிகைகைகளை நமது சித்தர்கள் நமக்கு காட்டிச்சென்றுள்ளனர் .
சிறுநீரகத்தைக் காக்கும்.சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, நெருஞ்சில், அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும், நித்திய கல்யாணியும், இதயத்திற்கு செம்பருத்தி, மூளைக்கு வல்லாரை என இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர் .இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும் நண்பன். மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில்இருந்தாலும்கூட, முதலில் வேர் பாரு, தழை பாரு மிஞ்சினா மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு' என்பது சித்தர்களின் வழி. இலைகளில் இருக்கும் வைத்திய முறைகள், நோய்களை வராமல் தடுக்கும் இயற்க்கை முறை. உணவிலேயே சரிப்படுத்த நாம் எடுக்கும் முதல் வழி.
இதன் வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.
நோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்:
அதிமதுரம்
தீரும் நோய்கள்: இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
அருகம்புல்
தீரும் நோய்கள்: இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம், உடல் அரிப்பு, நமைச்சல், வெள்ளைப்படுதல்.
இஞ்சி
தீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.
எள்
தீரும் நோய்கள்: தேள், குளவி, பூச்சிகளின் விஷக்கடி, கட்டிகளுக்கு மேல் பூச்சு.
ஏலக்காய்
தீரும் நோய்கள்: அஜீரணம், குமட்டல், வாந்தி.
ஓரிதழ் தாமரை
தீரும் நோய்கள்:சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்.
நோய் தீர்க்கும் மூலிகை மருத்துவம்:
சாதாரண சளி, காய்ச்சல் தொடங்கி, உயிரை பறிக்க கூறிய எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் முதலான கொடிய நோய்களுக்கும் கூட மூலிகை மருத்துவம் உள்ளது. சரியான முறையில் கடைபிடித்தால் எந்த ஒரு கொடிய நோய்களையும் இயற்கையாக கிடைக்கும் இந்த மூலிகைகளை கொண்டே சரி செய்துவிடலாம் என அடித்து சொல்கின்றனர் மூலிகை மருத்துவர்கள்.
மூலிகைகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல... விலங்குகளுக்கும் கூட நோயை தீர்க்கின்றன. இயற்கையிலேயே சில விலங்குகள் அவற்றின் மூலிகை தன்மைகளை அறிந்து வைத்துள்ளன. கீரி-பாம்பு சண்டையில் கீரிக்கு ஏறிய விஷயத்தை முறிக்க அது தேடி செல்லும் மூலிகை செடிகள், குரங்குக்கு காய்ச்சல் வந்தால் அது தேடி எடுத்து வாயில் அதக்கி கொள்ளும் மூலிகை என நிறைய உள்ளன.
மருத்துவ முறைகளில் மூலிகை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஆங்கில மருத்தும், சீனர்களின் அங்கு பங்சர் மருத்துவம் என குறிப்பிட்ட வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் சிறந்த இயற்கையான வைத்திய முறை மூலிகை மருத்துவம் என சொல்லப்படும் சித்த மருத்துவம் தான்.