தேசிய நீரோட்டம்

அணைகளை உடைத்து
கரைகளைத் தகர்த்து
மரங்களைச் சாய்த்து
இதோ
பாய்ந்து வருகிறது
தேசிய நீரோட்டம்
ஏன் விலகி நிற்கிறீர்கள்?
குதியுங்கள்.
நவீன பாவங்களை
கழுவுவதற்காகவே
புறப்பட்டு வந்த
புண்ணிய தீர்த்தம் இது.
அதோ
சாக்கடைகள் எல்லாம்
இதில்
சங்கமாகிப்
பவித்திரமடைவதை நீங்கள்
பார்க்கவில்லையா?
இதோ தங்கள் தீட்டுத் துணிகளை
இதில்
துவைத்துக்கொள்கிறவர்களை-
தங்கள்
வலையை வீசி இதில்
மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை-
நீங்கள் பார்க்கவில்லையா?
நீங்கள் மட்டும் ஏன்
விலகி நிற்கிறீர்கள்?
வான் பொய்த்தாலும்
தான் பொய்க்காத
நீரோட்டம் இது
தாகம் தணித்துக்கொள்ளுங்கள்;
வறண்ட வயல்களுக்கு
வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சுங்கள்.
உங்கள்
கப்பரைகளுக்கு இதனால்
ஞானஸ்நானம் கொடுங்கள்.
உங்கள் தீபங்களை இதில்
மிதந்து போக விட்டுவிடுங்கள்
உங்கள் முகவரிச் சுவடிகளை இதில்
போட்டு விடுங்கள்
உங்கள் கனவுகளின் அஸ்தியை இதில்
கரைத்து விடுங்கள்
உங்கள் ரத்தத்தை
வெளியே கொட்டி விட்டு
இதை நிரப்பிக் கொள்ளுங்கள்
இனி
நீர்களுக்கு
தனி விலாசங்கள் தேவையில்லை
நதிகள் குளங்கள் கிணறுகள்
எல்லாம் மூழ்கிவிட்டன.
கண்ணீரும் மூழ்கிவிட்டது
நீங்களும் மூழ்கிவிடுங்கள்


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 2:30 pm)
பார்வை : 64


பிரபல கவிஞர்கள்

மேலே