பாலைப் பாட்டு
வேட்டையாடும்
பின்பனி இரவு அகல
புலரும் காலையில்
உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன்.
அன்பே
மஞ்சத்தில் தனித்த என்மீதுன்
பஞ்சு விரல்களாய்
சன்னல் வேம்பின்
பொற் சருகுகள் புரள்கிறது.
இனி வசந்தம் உன்போல
பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும்.
கண்னே நீ பறை ஒலித்து
ஆட்டம் பயிலும் முன்றிலிலும்
வேம்பு உதிருதா?
உன் மனசிலும் நானா?
இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை
இனி இளவேனில் முதற் குயிலையும்
துயில் எழுப்புமடி.
நாழை விழா மேடையில்
இடியாய்ப் பறை அதிர
கொடி மின்னலாய் படருவாய் என்
முகில் வண்ணத் தேவதை.
உன் பறையின் சொற்படிக்கு
பிரபஞ்சத் தட்டாமாலையாய்
சிவ நடனம் தொடரும்.
காத்தவராயன் ஆரியமாலா
மதுரை வீரன் பொம்மியென்று
பிறபொக்கும் மானுடம் பாடி
காதலிலும் இருளிலும்
ஆண் பெண்ணன்றி
சாதி ஏதென மேடையை உதைத்து
அதிரும் பறையுடன்
ஆயிரம் கதைகள் பறைவாள் என் சதுரி.
என் காதல் பாடினி
திராவிட அழகின் விஸ்வரூபியாய்
நீ ஆட்டம் பயிலுதல் காண
உன் உறவினர் வீடுகள்
சிறுத்தைக் குகைகளாய் நெரியும் தெருவில்
எப்படி வருவேன்?
வேம்பு உதிரட்டும் நீ உதிராதே
ஏனெனில் உதிராத மனிதர்களுக்கும்
உதிந்த வேம்புகளுக்குமே
தளிர்த்தலும் பூத்தலும்.
.
நாளை நான் கிளை பற்றி வளைக்க
உன்னோடு சேர்ந்து ஊரும் கொய்து
கூந்தல்களில் சூடும் அளவுக்கு
பூப்பூவாய் குலுக்குமடி அந்த மொட்டை வேம்பு.
தேன் சிந்துமே வாழ்வு.