இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்

சந்தேகத்துடனே தொட்டுப்பார்த்தேன்
பையிலிருந்த பேனாவைக் காணோம்
வழியில் எங்கோ விழுந்து விட்டது
நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா
எங்கே விழுந்ததோ யாரெடுத்தாரோ

ஒருகணம் நினைத்தேன் வழியில் அதன்மேல்
வண்டி ஒன்று ஏறிவிட்டதாய்.
எண்ணிப் பார்த்ததும் உடம்பு நடுங்கிற்று
வண்டி எதுவும் ஏறியிராது.

பள்ளிக்கூடத்துப் பிள்ளையின் கையில்
கிடைத்திருக்கலாமென்று எண்ணிக் கொண்டேன்.
முள்ளைக் கழற்றிக் கழுத்தைத் திருகிப்
பல்லால் கடித்துத் தரையில் எழுதி
அந்தப் பையன் பார்ப்பதாய் எண்ணினேன்
அதற்கும் நடுங்கி எண்ணத்தை மாற்றினேன்

எவனோ ஒருவன் கிழவன் கையில்
அந்தப் பேனா கிடைத்ததாய் எண்ணினேன்
குடும்பத்தை விட்டுத் தொலைவில் வாழும்
அந்தக் கிழவன் மகளுக்குக் கடிதம்
எழுத முயன்று அவனுக்கெழுத
வராமல் போகவே என்னைத் திட்டியதாய்
எண்ணிக் கொண்டேன் எனக்குள் சிரித்தேன்.

மாலை வரைக்கும் நிம்மதியற்றுப்
புதிய பேனா ஒன்று வாங்கினேன்
சோதனைக்காகக் கடையில் கிறுக்கினேன்.
வீட்டுக்கு வந்ததும் முதலாம் வேலையாய்
எழுதிப் பார்க்கக் காகிதம் வைத்தேன்
என்ன எழுத? ஏதோ எழுதினேன்

புதிய பேனா எழுத எழுத
இழந்த பேனா இருப்பதை உணர்ந்தேன்
ஆமாம் எல்லாம் ஒன்றுதான்
இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:37 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே