படை இளைப்பாறல்

மலைமீது மாலைசாய்ந் தாற்போல்
மழை மேகம் இறங்கினாற் போல்
மலை நின்ற சோலைக் குள்ளே
மாவீரர் இருக்கை கொண்டார்!
மலை தாவி நடந்து வந்த
மயக்கத்தி லுறக்க மென்றோர்
மலையேறி விழுத லுற்றார்....
மரணம்போல் துயிலுங் கொண்டார்!

தானைதான் உறங்கி நிற்கும்...
தமிழ்வீரம் உறங்கிப் போமா?
மானத்தில் வளர்ந்த வீரர்
மலைத் தோளின் அழகு பார்த்தும்
வானையே ஒத்த மார்பின்
வடிவினைப் பார்த்து மங்கே
நானொரு மனிதன் மட்டும்
நனிதுயில் மறந்து நின்றேன்!

எழில்பூத்த மலர்ச்சோ லைக்குள்
இருளோடி மறையும் வண்ணம்
ஒளிபூத்த தென்ன வானில்
ஓவிய நிலவு தோன்றி
விழிபூத்த நிலையில் நானோ
வெறிபூத்த மனித னானேன்...
களிபூத்த நெஞ்சி னோடு
கால் போன போக்கில் போனேன்...

பொன்மழை பொழியும் வண்ணப்
புதுநிலா வானின் மேலே
என்னையும் இழுக்கும்... கால்கள்
இயலாமல் நிலத்தில் நிற்கும்!
மென்மலர் பூத்த பொய்கை
மேலெழுந் தாடும் வண்டின்
இன்னிசை நிலத்தின் மேல் நான்
இருப்பதே சரியென்றோதும்!

ஒப்பிலா அழகில் பூத்த
ஒளிக்காட்டில் கவிஞ னென்னை
இப்படிக் கொணர்ந்த நெஞ்சம்
இளமையில் தோய்ந்த நெஞ்சம்
அற்புதங் காட்டி வைக்க
அழைத்தது போலும்... ஆமாம்
செப்பவும் முடிய வில்லை
செந்தமிழ்க் கவிதை சொல்வேன்...

அழகடா அழகுக் கோலம்!
அவள் கோலம் அமுதின் கோலம்!
தழலிலே வெந்த கட்டித்
தங்கத்தின் புதிய கோலம்!
பழகவோ எதிரே வந்தாள்...
பைந்தமிழ்க் கன்னிப் பாவை?
நிழலிலே ஒதுங்கி நின்று
நெஞ்சத்தை அருகில் விட்டேன்...


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:54 pm)
பார்வை : 58


மேலே