மெசியாவின் காயங்கள் - கனவுகள்

அழகான கனவு அபூர்வமாய் சித்திக்கிறது
ஆயிரத்தில் ஒருவருக்கு.

சர்ப்பத்தின் நாவாக அச்சத்தைத் துருத்தி
நெளிந்து நீள்கின்றன கெட்ட கனவுகள்.

கலையும் தறுவாயில்தான்
கண்டு கொள்கிறேன் நல்ல கனவுகளை.

இரவுக்கு வெளியே
கனவுக்குக் காவலிருக்கும்
தேவதைகளும் உறங்குகிறார்கள்

அவர்கள் கனவுகள்
நாம் நுழைய முடியாத
நீர்க் குமிழியாகப் பூட்டியிருக்கின்றன.

வெளியிலிருந்து பார்த்தாலும்
தெளிவாய்த் தெரிகிறது கபடமற்ற கனவுகள்.

திரும்பத் திரும்ப வரும் கனவுகளில்
திருத்தங்களே இருப்பதில்லை.

இறுதிக் காட்சியாக விரிந்து
கண்ணைக் கொத்தும் இரக்கமற்ற கனவுகளில்
செத்துச் செத்து அலுத்துப்போனது

இறப்பதுபோல் எல்லோரும் காண்கிறார்கள்
ஏறக்குறைய இரண்டு கனவுகளேனும்.

பிறப்பதுபோல் வந்திருக்குமா
யாருக்கேனும் ஒன்று.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 8:58 am)
பார்வை : 102


பிரபல கவிஞர்கள்

மேலே