தமிழே! உயிரே!

தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!
அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!

தமிழே! உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!
அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்!

தமிழே! நீயேஎன் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்!
அமிழ்தே! நீதரும் இன்பம்....
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்?

தமிழே! இன்றுனைப் பழிக்கும்
தறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்
அமிழ்தே! நீவாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்!

தமிழே! உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!
அமிழ்தே உனைஎவன் தொட்டான்?
அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:43 pm)
பார்வை : 38


பிரபல கவிஞர்கள்

மேலே