அந்நாள் எங்கே?

முடியோடு முன்னாளில்
மூவேந்தர் புகழோடு
முரசி னோடு

கொடியோடு மாற்றார்முன்
குனியாத மார்போடு
கொற்றத் தோடு

படையோடு தனியான
பண்போடு பிறநாடு
பார்த்துப் போற்றும்

நடையோடு பாராண்ட
தமிழா! உன் நாடெங்கே?
புகழேடெங்கே?

தரணிக்கோ உன்நாடு
தாய்நாடு! நீயோ பார்
பட்டாய் பாடு!

தெருவுக்கு வந்தாய் பார்!
தேகத்தை விற்றே தின்
றாய் சாப்பாடு!

மரபுக்கு மாறாக
மாற்றான் கால் ஏற்றாய்பார்!
கெட்டாய் கேடு!

பரணிக்குப் பொருள்தந்த
தமிழா! பாழடித்தாய் பார்
வரலாற்றேடு!

வஞ்சத்தால் தமிழ்மண்ணின்
வாழ்வுக்குத் தீ வைக்க
வருவோர் தம்மை

நஞ்சுண்ட கைவேலின்
நாவுக்குப் பலியாக்கி
நாடு காத்த

நெஞ்சங்கள் இன்றெங்கே?
தமிழ்மான நெற்காட்டில்
நெருஞ்சிப் பூண்டை

அஞ்சாமல் நட்டதார்?
தமிழா! உன் போர்வீரம்
அழிந்த தோடா?

வாள்தொட்ட கையெல்லாம்
வலிகுன்றிப் புகழ்குன்றி
மானம் குன்றிக்

கால்தொட்டு வாழ்கின்ற
கண்றாவிக் காலத்தைக்
கண்ணால் கண்டோம்...

பாழ்பட்ட இந்நாட்கள்
பலநாட்கள் ஆகாமல்
பார்த்துக் கொள்வோம்!

தோள்தட்டி மானத்தில்
தோய்கின்ற போராட்டம்
தொடங்கு வோமே!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:44 pm)
பார்வை : 24


பிரபல கவிஞர்கள்

மேலே