கதைக் கவிதை

அத்தனைபேர் இருந்த பேருந்தில்
அது நிகழ்ந்தது
அப்பாவைவிடவும் வயது கூட
அந்தப் பெரியவருக்கு
தளர்ந்துபோன உடம்பு
குச்சிகுச்சியான கையும் காலும்
எப்படித்தால் அந்தப் பாய்க்கட்டுகளை ஒத்தையில் சுமந்து வந்து
ஓட்டுநர் பக்கமாக ஏற்றி இறக்கி வைத்தாரோ
அந்த ஊரின் கடைசி நிறுத்தத்தில்
பயணச் சீட்டு கொடுக்கும் நேரத்தில்
வெடித்துக் கிளம்பிஅது தகராறு
சுமைக்குக் கட்டணமாக முழுச்சீட்டுப் போட
முஸ்லீம் முதியவர் அரைச்சீட்டுத்தான் என மறுதலிக்க
வழமையைச் சொல்லி வாதித்த
வயசாளியின் பக்கம் பாதிக்கூட்டம்
நடத்துநரின் நியாயத்துக்கு
லாலி பாடியது மீதிக் கூட்ட்ம்
இருக்கிற காசுக்குள்
வருகிற ஊரில்
இறக்கி விட்டார் நடத்துநர்
முழுக்கட்டணம்தான் பாய்ச்சுமைக்கு என்று
முதலிலேயே சொல்லியிருந்தாராம் அவர்
பாவப்பட்ட கிழவர் சபித்தார்
நொந்துகொண்டு அழுதார்
ஆதரவாக ஏந்திவைத்துக் கொள்ளும் உயிர்கள்
அனுப்பி வைத்திருக்கும் நிச்சயமாக ஊருக்கு
என்றபோதும் அன்றையதினம்
அவருக்கு உதவாமலிருந்தது
உறுத்துகிறது இந்த நிமிஷமும்
நண்பரிடம் வாங்கிவந்த யாசகக் காசில்
பத்து ரூபாய்க்கும் மேல் பையிலிருந்தது
வேலையற்ற
வீட்டிலிருந்தது நாலுநாளில் திரும்பிவந்து அலையவேண்டிய
வெங்கொடுமை நிலைக் குழப்பத்தில் சிக்கலில்
வறண்டு போயிற்றோ என் மன ஊற்று
விளங்கவில்லை இன்னமும்
எப்படிக் காய்ந்தது என் மனஈரம்
எவ்விதம் உலர்ந்தது என் பச்சையம்
எனக்கு நானே அந்நியமானதுதான் என் சோகம்
ஆழ்ந்து யோசித்தால்
அவர் ஸ்திதியல்ல பிரச்சனை
என் ஸ்திதிதான் எனக்குப் பிரச்சனை


கவிஞர் : விக்ரமாதித்யன்(2-Nov-11, 3:26 pm)
பார்வை : 121


மேலே