தமிழுக்கு அமுதென்று பேர்!

தமிழுக்கு அமுதென்று பேர்!
அடடா!

இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள தமிழர்க்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!

இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...

பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பெரியாரைப் பாடிய-
நேயன்மாரில் ஒருவன்!

யாத்த கவிதைகள்
யாவையும்...

மாணிக்கம்
மாணிக்கமாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
மாணிக்க வசகனே!

ஆனால் ஒன்று;
இவனால்...
பரி நரியாகவில்லை;
நரி பரியாகவில்லை;

இவனால்...
வரி எரியாகியது;
எரி வரியாகியது; -அவ்
வரியில்-
எரியில்-
கண்மூடித் தனமெல்லாம்
காய்ந்து கரியாகியது!

இவன்
இருந்தமிழர் இருள் ஈக்கப்-

புதுவையில் உதித்த
புது வெயில்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல தமிழரென்று
கூவப் பிறந்த பூங்குயில்!

கொட்டோ கொட்டென்று
கொட்டினான் கவிப்பறை; அதில்
கந்தலோ கந்தலென்று
கிழிந்தது கீழவர் செவிப்பறை!

புரட்சிக் கவிஞன் என்று-
புகழ் பூத்து நின்ற பாரதிதாசன்...

புதிய தமிழ் நடையில்- பாக்கள்
புனைந்து தருவதில்-தனது
குருவை மிஞ்ச வேண்டுமென்று- அகத்தில்
குவித்து வைத்தான் ஆசையை;

ஆனால்
அதே நேரம்-
குருவை மிஞ்சக் கூடாதென்று- முகத்தில்
குறைத்து வைத்தான் மீசையை!

இத்தகு-
தகவார்ந்த கவிஞன் தான் அன்று- இசைத்தான்
‘ தமிழுக்கு அமுதென்று பேர்!’ என்று;

ஆம்;
அமுதும் தமிழும் ஒன்றுதான்!

அவ் அமுதம்-
பாற்கடல் தந்தது;

இவ் அமுதம்-
நூற்கடல் தந்தது;

அவ் அமுதம்-
வானவர் தானவர் கடைந்தது;

இவ் அமுதம்-
பாவலர் நவலர் கடைந்தது;

கண்ணுதல் பெருமான்-தன்
தொண்டை கொண்டு;
இந்த நஞ்சை அடக்கினான்
கவிஞர் பெருமான் -தன்
தொண்டைக் கொண்டு!


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 12:36 pm)
பார்வை : 135


பிரபல கவிஞர்கள்

மேலே