தாய்த்தமிழை இகழ்வோர் முகத்தில் உமிழ்- தமிழா! தமிழா!

தமிழா! தமிழா!
உனக்கும் எனக்கும்-
தாயால் வந்தது யாக்கை;
தமிழால் வந்தது வாழ்க்கை;

எனவே
எஞ்ஞான்றும்...
தாயைத்
தமிழை -
வாழ்த்தப் பழக்கிடு
வாக்கை வழங்கும் நாக்கை;

அகரத் தமிழை ஆயுள் மூச்சாய் -
நுகரச் சொல்லிடு மூக்கை;

அன்னணம்
ஆயின் -
அறவே தவிர்க்கலாம்
அறியாமை என்னும் சீக்கை;

நுண்மான்
நுழைபுலத்தால்-
அடையலாம் நீ
அரிமா நிகர்த்த நோக்கை!

தமிழனே! என்
தோழனே!

அமிழ்தம் அனையது
தமிழ்; அதில் நீ
அமிழ்; அமிழ்ந்து
இமிழ்; இமிழ்ந்து
குமிழ்;

ஆங்கிலம்
அளவு-
சோறு போடாது தமிழ் -எனச்
சொல்வோர் முகத்தில் உமிழ்!


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 12:38 pm)
பார்வை : 133

பிரபல கவிஞர்கள்

மேலே