மானிட சக்தி

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்
வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
மானிடத் தன்மையை நம்பி - அதன்
வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி!
'மானிடம்' என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்

மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த
வையத்திலே அவன் செய்தவரைக்கும்
மானுடத் தன்மைக்கு வேறாய் - ஒரு
வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிட மென்பது புல்லோ? - அன்றி
மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்!

மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
மானிடம் என்பது குன்று - தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக் கினி தாக - இங்கு
வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
வான்திசை எங்கணும் நீ பார்! - வாழ்வின்
வல்லம 'மானிடத் தன்மை' என்றேதேர்.


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:24 pm)
பார்வை : 21


பிரபல கவிஞர்கள்

மேலே