இறைவனிடம் ஒரு வேண்டுகோள்
கடைசி அண்டா குண்டா வரை
அடகு வைத்துப் பட்டம் பெற்ற
மகனைக் காண பட்டணம் வந்த
அம்மாவை ஊருக்கு வழியனுப்பும்
நாளில் பெரிய உணவகங்களை தவிர்த்து
கையேந்தி பவனில் தான்
உணவு வாங்கி தர முடிந்தது.
என் பார்வையின் புழுக்கத்தை
புரிந்து கொண்ட அம்மா
‘இங்கு சாப்பாடு நல்லா இருக்கு’ என்றாள்.
இறைவனிடம் எனக்கு ஒரு வேண்டுகோள்.
நான் தற்போது ‘ஒ’வென்று
கதறி அழ அம்மாவின் பேருந்து
சடுதியில் புறப்பட வேண்டும்.