வள்ளல் வாய்மை ஜெபிக்கும் சகச(சஹஜ) நிலை வாசி யோகம்

நாள் 1

என்றென்றுஞ் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(ஆழமாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் ஜெபிக்கவும்)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் பூரணமாய் வெளிப்பட்டிருக்கிறது(மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் ஜெபிக்கவும்)

என் ஞானப் பயணத்தில் மிகப் பெரும் பரிணாமப் பாய்ச்சலை ஏற்படுத்த மூல முதல் காரணமானது வள்ளல் பிரானால் எனக்கு அறிவிக்கப் பட்ட இம்மூல மந்திரம், வள்ளன்மையின் உச்சம் இது, சாதாரணமாக மனிதன் என் _______ என்று சொல்லும் எல்லாவற்றையுமே விடாமல் பற்றிக் கொண்டிருப்பான். என் ---------- என்றாலே அதி தீவிர தன்னல இறுக்கம். "என் பூரணத்துவம்" இதற்கு விதி விலக்கு. "என் பூரணத்துவம்" என்று சொல்ல முடிந்தவன் கடவுள் ஒருவனே, அவன் பரம தயா வள்ளலாதலால் தன் பூரணத்தைப் பூரணமாய் எவ்வொன்றோடும் பகிர்ந்து கொள்கிறான், அவன் தன் மொத்தத்தையும் எவ்வொன்றுக்கும் தந்து விடுகிறான், என்றாலும் அவன் பூரணமாய் இருக்கிறான், அவன் பகிரப் பகிர அவன் பூரணத்துவம் இன்னும் முழுமையடைகிறதே தவிரக் கிஞ்சித்தும் குறைவதில்லை, உபநிடத வாக்கியம் ஒன்றுண்டு: பூரணத்திலிருந்து பூரணம் வந்தது, பூரணம் வந்த பின் எஞ்சியதும் பூரணமாய் நின்றது. இது மனித மனத்தால் விளங்கிக் கொள்ள முடியாத கடவுள் கணக்கு.

இது வரை நான் எழுதியதெல்லாம், இனியும் நான் எழுதப் போவதெல்லாம், ஏழாந் திரு முறையின் தொடக்கம் என்று வள்ளல் பிரானே எனக்கு அறிவித்த இந்த மந்திரத்தின் விரிவாக்கம், வள்ளல் பிரானின் உபதேசங்கள் அனைத்தும் இம்மந்திரத்துள் அடக்கம். நான் இந்த மந்திரத்தை அனுபவித்தது ஒரு நாத ஜோதி அதிர்வாக, என் மெய்ம் மன இருதயப் பரவச அனுபவ‌ம், பின் இவ்வார்த்தைகளாய் வெளிப்பட்டது, வள்ளல் பிரானே என் மதிக்கெட்ட அவ்வதிர்வை இவ்வாறு மொழி பெயர்த்து எனக்குத் தந்தார் என்று சொல்வது இன்னும் சாலப் பொருந்தும்.

இம்மந்திரத்தின் பின்னோட்டமான நாத ஜோதி அதிர்வு நம் இருதய இயல்பு, அது நம் வாசி மூச்சு மூலம் நம் மெய்க்கும் மனத்துக்கும் மற்றெல்லாவற்றுக்கும் பகிரப் படுகிறது.

எங்கும் பூரணம்
எதிலும் பூரணம்
என்றும் பூரணம்

பூரணத்தைப் பூரணமாய்ப் பருகு, பூரணமே தன்னைப் பூரணமாய்ப் பகிர்ந்து உனக்குப் பருகத் தருகிறது, அப்பரி பூரணத்தைப் பூரணமாய்ப் பகிரு, பூரணம் செய்வதை நீ அப்படியே செய்கிறாய், யாவரும் பருகப் பகிர்கிறாய், பூரணமே இதைச் செய்கிறது, நீ பூரணமாய் இதைச் செய்யப் பூரணத்துக்கு அனுமதி தருகிறாய்.

இந்த மூல மந்திரம் உணர்த்தும் பூரண ஞான அதிர்வை இன்று உம்மோடு பகிர்வது என் பாக்கியம்.

பூரணத்தைப் பூரணமாய்ப் பருகு அப்பரி
பூரணத்தைப் பூரணமாய்ப் பகிரு

எழுதியவர் : நான் நாகரா(ந. நாகராசன்) (13-Jan-13, 10:50 am)
சேர்த்தது : Natarajan Nagarajan
பார்வை : 319

மேலே