சருகுகள் சலசலக்கிறது.....!

"புகை நமக்கு பகை"
யார் சொன்னது.....?
புகைத்துப் பார் புரியும்....!
இருவிரல் இடையில்
சிகரட்டை வைத்து
இழுத்துப் பார் தெரியும்...!
உன் உயிரையே உறியும்...!
நானாய் கற்றுக் கொள்ளவில்லை
புகை பிடிக்க.....
என் குரு
என் அப்பா தான்...!
ஆம்...
அவருக்கும் பீடி பிடிக்கும்...!
என் முன்னே
என்றும் அவர்
புகை பிடிப்பார்....!
தொடர் இருமலிலும்
தொடர்ந்தே கம்பீரமாய்
புகைப்பிடிப்பார்....!
எட்டு வயதிலே
என் அப்பாவின் பாக்கெட்டில்
பீடி எடுத்தேன்...!
தப்பென்று தெரிந்தே
மறைவாய் சென்று
பற்ற வைத்தேன்....!
முதல்முறை புகைத்தேன்...!
இருமி இருமி
கண்ணீர் வடித்தேன்....!
புகைவழியே
எமனுக்கு தூது விடுத்தேன்...!
தினமொரு பீடியில்
தினங்கள் கடந்தேன்....!
"மாற்றம் தானடா
மானிட தத்துவம்"
தத்துவத்தை தவறாகவே ஏற்றேன்...!
பீடியை துறந்தேன்....!
சிகரெட்டை சுவைத்தேன்...!
நண்பர்கள் முன்னே
ஆண்மை காட்ட புகைத்தேன்...!
தம் கட்டி இழுத்து
மூச்சுக்குழல் வழியே
புகைவிட்டு புன்னகைத்தேன்...!
என் நுரையீரல் தீண்டி
புண்ணாக்கிச் சென்றது புகை....!
"புண்பட்ட நெஞ்சை
புகைவிட்டு ஆற்று"
பொன்மொழி சொன்னவன் எங்கே...?
புகைவிட்டதனால் தான்
புண்பட்டதடா என் நெஞ்சம்....!
அணைத்தேன் அணைத்தேன்
இருவிரல் இடையில்
சிகரெட்டை அணைத்தேன்....!
புகைத்தேன் புகைத்தேன்
ரசித்தே ருசித்தே புகைத்தேன்...!
இன்று இதோ நானும்
புகையில் புகைந்தேன்....!
சருகாய் தானே உதிர்ந்தேன்....!
இன்னும் இங்கே
என்னைப் போல்
மரம் விட்டு வந்த
சருகுகள் சலசலக்கிறது.....!
"புகை நமக்கு பகை" என்று
சொல்லுங்கள்.....
உயிர் உடல் விட்டு
போன பின்
பண்பட்டு என்ன பயன்.....?