புத்தாண்டு பிறந்தது ...!
இந்தாண்டு மழை என்ன
பஞ்சாங்கத்தைத் தாத்தா புரட்ட ...
செவ்வாய்க்கிழமைப் பிறப்பதால்
செல்வம் பொங்கும் என
பஞ்சாரத்தை மூடியபடி
பாட்டி சொல்ல ...
நல்லவேளை இந்த ஆண்டு
அரசு விடுமுறை அவ்வளவாக
ஞாயிற்றுக்கிழமை வரவில்லை
தம்பி பெருமூச்சு விட ....
நல்ல வேலை
இந்த ஆண்டாவது
இவனுக்குக் கிடைக்காதா
அப்பாவும் அம்மாவும் என்னை
மேலும் கீழும் பார்க்க ...
இந்த ஆண்டாவது
அவளை மறக்கும் நினைப்பில்
அவளையே நான்
நினைத்துக் கொண்டிருக்க ....
நாட்காட்டியில்
முகூர்த்த நாளைப் புரட்டியபடி
முப்பது வயது அக்கா ...!

