முகில் மேல் காதலாய்
கரிய மேகமே
கார் மேகமே
எம்மை கொஞ்சம் பாராய்
எழில் மேகமே
மிதவை மேகமே
உன் ஊர்வளம்
சற்றே நிறுத்தி
எம் குறை கொஞ்சம் கேளாய்
உன் இடி முரசு கொட்டு
தோழமை எல்லாம் திரட்டு
எம்மேல் நோக்கி
ஒரு மாநாடுகூட்டம் நடத்து
எம்மேல் பிழையெனில் பொறுத்து
உன் சினம் அறவே தவிர்த்து
மின்னல்கள் என்னும் உன்
மின்னும் வாள்களை
எம்மேல் வீசாது
கருணை கொள்
எம்மை காத்துனில்
உன் எழில் கூந்தல் சூடியுள்ள
தூய வெண்ணிற துளிப்பூக்களை
எம்மேல் கொஞ்சம் தூவு
பருவத்தில் நீ பொய்த்தால்
வசந்தத்தை யாம் இழப்போம்
வறண்ட நிலத்தில் வாடிப்போய்
நின்றபடி அல்லவா யாம் இறப்போம்
என் உயிர் கொடியில்
உதிரமாய் நீ ஓட
பூப்பதும் காய்ப்பதும்
கனிவதுமாய் நாங்கள்
வீரமாய் போர்க்களம் சென்ற
தன் காதல் துணைவனின்
வருகைக்காய் ஏங்கி
வழி மீது விழி பூத்து
காத்திருக்கும் துணைவி போல்
உனக்காய் காத்திருக்கும் யாம்
உயிர் உன்னோடு இருக்க
மண்ணில்
வெறும் மெய்யாக வீற்றிருக்கும்
நாங்கள்
மேகமே உன்னை
உயிராய் காதலித்தபடி
நாங்கள்
-மரங்கள்