இயற்கை

பூத்துக் குலுங்கும் பூக்கள் - அவைகள்
புன்னகைக்கும் மழலை முகங்கள்.
வானியல் நிகழ்வுகள் - அவைகள்
வாழ்வின் வசந்தங்கள்.
மின்னும் நட்சத்திரங்கள் - அவைகள்
அனைத்தும் வைரங்கள்.
கடலின் அலைகள் - அவைகள்
பசுமையான நினைவுகள்.
தவழ்ந்துவரும் வெண்ணிலவு - அது
அழகின் உயர்வு.
கதிரவனின் உதயம் - அது
காலத்தின் கட்டாயம்.
ஞாயிறின் மறைவு - அது
நாட்களின் நிறைவு.
மேகங்களின் கண்ணீர் - அது
நல்மனங்களின் செந்நீர்.
புவிதனில் மரங்கள் - அவைகள்
நிழல்தரும் வரங்கள்.
மரங்களில் கனிகள் - அவைகள்
சுவை தரும் இனங்கள்.
கனி தரும் விதைகள் - அவைகள்
செடிதரும் செயல்கள்.
செடியின் மொட்டுக்கள்
மலர்ந்ததும்,
புன்னகைக்கும் தேன் வண்டுகள்,
வண்டுகளின் ரீங்காரம்,
பறவைகளின் கீச்சொலி,
குயிலின் குக்கூக்கூ - இவைகள்
இதயத்தின் கனத்தை
இதமாய் இறக்கி வைக்கும் இசைகள்.
மலையடிவார மரங்கள்,
மரங்களினூடே வளைந்தோடும் நதிகள்,
நதிக்கரையில் நீர் அருந்தும் மான்கள்,
மாந்தரைக் கண்டதும்
மறைந்தோடும் அவைகள்.
இயற்கையின்
கலை நிகழ்ச்சிகள் இவைகள்.
நித்தம் அழகிய நிகழ்ச்சி,
கண்டதால் மன மகிழ்ச்சி.
நிசப்தமான நிலவொளியில்,
வீசுகின்ற தென்றலில்,
நிம்மதியான நித்திரை நிதமும்
மொட்டை மாடியில்...
இந்த இயற்கை,
இயற்கை எய்வது எப்போது?
என் உயிரையும்
மாய்த்துக் கொள்வேன் அப்போது.

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (13-Feb-13, 11:58 am)
பார்வை : 279

மேலே