[411]-கட்டுரை: புதுக்கவிதைகளில் உவமை நயம்...
கவிதையை அழகுபடுத்தவும் ,உணர்ச்சியுடன் கருத்தை வெளிப்படுத்தவும் கவிஞர்களுக்கு உதவியாக இருப்பது இலக்கணக் கூறுகளில் ஒன்றான உவமையாகும்.உவமை என்பது பற்றி ஆர்வம் எடுத்து இளம் கவிஞர்கள் தெரிந்துகொண்டு தமது புதுக்கவிதைகளில் அவற்றைப் பயன்படுத்தும் பொழுது கவிதைகள் சிறப்பதோடு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்; எழுதுபவருக்கு மன நிறைவையும் தரும். இதை மனதில் கொண்டே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
உவமைஎன்பது தொழில், பண்பு, பயன் ஆகியவற்றால் பிறப்பது. இது வெறும் அழகுக்காக மட்டும் பயன்படுத்தப் பெறுவது இல்லை. இதன் மூலம் எளிதில் உரைக்க இயலாத உணர்வுகளை மிக எளிதாக உணர்த்திடவும் முடியும் என்பதால் பயன்படுத்தப்படுகிறது. உவமை கருத்த விளக்க மட்டுமன்றி, உணர்வின் உச்ச நிலைக்குப் படிப்பவர்களைக் கொண்டுசெல்லவும் பயன்படக் கூடியது, என்பதை ஊன்றி உணர்தல் வேண்டும்.
இதற்கு உவமையும் பொருளும் ஒத்திருத்தல் வேண்டும். பெரும்பாலான புதுக்கவிதைகள் ஒப்பீட்டுத் தன்மை கொண்டவையாக அமைந்திருப்பினும் , உவமை பல வடிவங்களில் இவற்றில் உருவெடுத்துள்ளது.
சிலவற்றைக் காண்போமா....
01: கவிஞர் வைத்தீஸ்வரன் கவிதைகளில் :
'கொடியில் மலரும்
பட்டுப் பூச்சி
கைப்பிடி நழுவி
காற்றில் பறக்கும் மலராச்சு'.
'மரத்தை விட்டுக் காகங்கள்
இலைகளாய்ப் பறக்கும்
சில சமயம்'
யானைத் தந்தம் போலவே
பிறைநிலா'
'வெட்டி எறிந்த நகம் போலவே
பிறைநிலா'
அறுத்தெடுத்த பூசணிக்காய்
கீற்றுப் போல
பிறைநிலா'
02. கவிஞர் அப்துல் இரகுமான் கவிதைகள்:
'உங்கள் பாரம்
உங்களைவிட
மதிப்புடையதாகட்டும்..
திரிசுமக்கும்
சுடரைப் போல '
வாழ்க்கை என்பது
எதிர்காலத்தை நோக்கிச் செல்கிற
பயணம்,
நீயோ
கயிறு திரிப்பவனைப் போல்
பின்னால் போய்க்கொண்டிருக்கிறாய்'
'ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுவர்த்தியாக
நீ ஊதுவத்தியாக'
'காக்கிச் சட்டை
சட்டத்தின் கவசம்
சில சாமியார்களின்
காவியுடையைப் போல
இதையும்
வேஷமாக்கிவிடாதீர்கள் '
அடிப்படையில் மனித சமூகம் தமது மனைவி, ,
பிள்ளைகள், அப்பா, அம்மா எனும் சிந்தனையை மறந்தது இல்லை இதைச் சொல்ல வரும் கவிஞர் சொல்வது:
'வெளியே செல்லும்போதும்
நத்தையைப் போல்
வீட்டையும் சுமந்துகொண்டுதான்
செல்கிறீர்கள்..'
இன்னும் வரும் படிக்க வரும் வாசகர்களின் வரவேற்பைப் பொறுத்து.....