என் கவிதையின் துயரம்...

எழுதி முடித்த பிறகு...

என்னுடைய கவிதைகள்...
என்னோடு பேசுவதில்லை.

அவைகளை-
நான் சிதைத்துவிடுவதாய்
கோபம் பொங்கிவிடுகிறது அவைகளுக்கு.

என்னுடைய காதல் கவிதைகளில்
நான் காதலைத் திரித்துக்
காமம் ஆக்கிவிடுவதாய்
பெரும் கோபம் அவைகளுக்கு.

என் புரட்சிக் கவிதைகளோ-
அடிமைத்தனத்திற்கு வரவேற்பளிக்கும்
சிவப்புக் கம்பளம் விரித்த சிறைச்சாலை
ஆகிவிடும் வேதனை அவைகளுக்கு.

என் தலைவனைப் பற்றிய கவிதைகளோ-
தனி நபர் "வாழ்த்துப் பா" ஆகி..
கட்-அவுட்களில் பாலைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

என்னுடைய "அம்மா" பற்றிய கவிதைகளிலும்
அரசியல் வந்துவிடுவதாய் அச்சம் அவைகளுக்கு.

இறந்த காலத்தைப் பேசும் கவிதைகளில்-
"வாழ்க்கை" செத்துப்போன வருத்தம்
கண் நீராய்த் தெறிக்கிறது அதன் கன்னங்களில்.

"நாகரீகம்" பற்றிய கவிதைகளிலோ-
ஆடை குறைவாய் இருப்பதாய்
அரற்றுகிறது என் கவிதைகள்.

கடவுளையோ....மதத்தையோ...
எழுதிய கவிதைகள்...
"காணாமல் போனவர்கள்"...மற்றும்
"தீவிரவாதிகள்" பற்றிய விளம்பரமாய் இருப்பதாய்
விசும்புகிறது என் கவிதை.

மனிதம் பற்றி எழுதிய கவிதைகளோ-
வெடிகுண்டுகள் வெடித்துச் சிதற
அநாதையாகிக் கிடக்கிறது
என் தேசத்தின் வீதியெங்கும்.

என்தேசத்தின் ஏழைகளும்...அரசியலும்..
இலவசங்களின் பின்னால் திரிந்து கொண்டிருக்க..
அவைகளுக்கான என் கவிதை...

வன்முறையாய்...பாலியல் கொடுமையில்
சிக்கிய சிறுமியென...
செய்வதறியாது நிற்கிறது.

சட்டங்களுக்கும்...நீதிகளுக்குமான என் கவிதைகள்..
இப்போதுதான்...இருட்டறையில் தனக்கான
வெளிச்சத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

தேசம்...ஒருமைப்பாடு பற்றிய கவிதைகளோ...
ஊழலிலும் ...நீர்ப் பங்கீடுகளிலும்...
ஒருக்களித்துக் கிடக்க...

எதனாலும் சமாதானமாகாத என் கவிதையோ-

என்னைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது
தனக்கும்...எனக்குமான தற்கொலைக் கயிறு ஒன்றைத்
தயார் செய்து கொண்டே இருப்பதாய்ச் சொல்லி
என்னை அச்சுறுத்தியபடி.

எழுதியவர் : rameshalam (25-Feb-13, 6:32 pm)
பார்வை : 141

மேலே