ஒரு நாள் ஓய்வின் உலகம்……

ஓய்வின் உலகம்……

கணவனுக்கு கடமை செய்து
அக்கறையாய் அனுப்பிவச்ச
சாதனையை முடித்து
நிக்கையிலே .....

அம்மா என்றழைக்கும் குரலால்...
மன்னவனின் நினைவினிலே
மகனை மறந்து விட்டேனோ ?
விசித்திரமாய் கதை சொல்லி
பிடி உணவை பிசகாமல் ஊட்டி
பாங்குடனே பணிசெய்து
பள்ளியிலே விட்டு
வீடு திரும்புகைலே ...

விட்ட குறை தொட்ட குறையாக
துலங்காத பாத்திரங்கள் இளிக்க...

துயரத்தோடு நரம்புப் பேழையிலே
துரத்தி வரும் அழுக்கு துணி அழைக்க...

பளிச்சென முகம் தெரிந்த தரையெல்லாம்
கிரீச்சென காலில் சொரசொரத்துக் கிடக்க ......

சீராய் செய்து முடித்து
சிந்தனையிலே ஆழ்ந்தால் ..

இம்மாத பட்ஜெட்
இந்தியாவின் பட்ஜெட்டாய் எதிர் நிக்கும்..

மீதிவைத்தால் மீறாமல் உண்வேனென்று
மிச்சம்வைத்த சிற்றுண்டி கண்ணில் பட
அமிழ்தே அருந்திய நினைவில்
ஆசையாய் அதையும்
மதியத்தில் உண்டு முடித்து ...

அமைதியாய் கண்மூடி
ஆழ்ந்து உறங்கும் நேரத்தில்...

மனதை கொள்ளை கொள்ளும் மகனும்
காலத்தை கவிதையாய் மாற்றும் கணவனும்
இதமாய் தழுவி மாலை வேளை
சமையலறையை சல்லடை போட்டு
சலிப்பார்களே என்ற எண்ணத்தில்
புதிதாய் ஒரு பதார்த்தம்
புது யுக்தியுடன், கிளர்ச்சியுடன்
செய்து முடித்து உண்டு பார்க்கையிலே .....

உயிர் உருகும் பாசத்தின் பரிமாற்றம்
எத்தனை உன்னதம்
கொள்ளை போகும் என் ஒய்வு நேரம்
அன்பு உள்ளங்களால்….!

எழுதியவர் : bhanukl (27-Feb-13, 8:40 pm)
பார்வை : 248

மேலே