சுவாசமே காதலாக...! தொகுப்பு - 5
காதலின் தகிப்பில் உன் மீது எனக்கு சில கோபங்கள் வருவது போல இருக்கிறது. கோபங்கள்தான் என்று நினைத்து கோபத்தினை புரட்டிப் போட்டால் அங்கே மீண்டும் என்னை பார்த்து கண்ணடித்து சிரிக்கிறது காதல்.
நீயும் உன்னைச் சுற்றிய உறவுகளும் வெகுகால தொடர்பில் இருந்தாலும் நான் சற்று முன் தான் உன் வாழ்க்கை வாசலில் நுழைந்திருப்பதாலும் என் உணர்வுகள் வார்த்தைகளாக மாறாமல் கோபமாக மாறி மீண்டும் மீண்டும் காதல் நெருப்பை அள்ளிக் கொட்டி என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.
நான் ஒரு வித தவிப்பில் என் காதலை உன்னிடம் சொல்லியும் எனக்கான உரிமைகளை உன்னிடம் சொல்ல இயலாமல் என்னுள் புலம்பி எனக்குள்ளேயே உனக்கான உரிமைகளை படரவிட்டு படரவிட்டு அதன் ஆதிக்கத்தில் தளர்ந்து கொண்டே இருக்கிறேன்.
பெரும்பாலும் உன்னோடான பேச்சுகளில் சிரிப்புக்களாகவும், சந்தோசங்களாகவும் நான் படர விடுவது எனக்குள் இருக்கும் உன் மீதான உரிமைகளைத்தான். நீயோ சிறு பிள்ளையென இருக்கிறாய்... எப்போதும் என்னை கண்டு சிரிக்கிறாய் என் அதீத காதலின் வலுவெல்லாம் திரட்டி உன் காலடியில் வைக்கும் கணங்களில் கண்களில் நீர் துளிர்க்கிறாய்.
உன்னோடு முதன் முதலாய் நான் பேச ஆரம்பித்த கணங்களை மறந்து விடவில்லை. எவ்வளவு ஆர்ப்பாட்டமான ஒரு அறிமுகம், புன்னகை, கம்பீரமாக உன்னுடன் என் காதலை நான் பகிரும் போதே... அதற்கான ஒப்புதலை கண்களால் வழிய விட்டு என் கரம் கோர்த்த அந்த நொடி.....
மெலிதாய் வீசிய காற்றில் .. உலகம் மிக அழகாயும் படைப்புகள் அதீத அற்புதங்களுக்காக படைக்கப்பட்டவை என்றும் நானும் எனக்குள் இருந்த நீயும் தடையின்றி சிந்தித்த பொழுதுகள் அவை.
இன்றோடு ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கும் நமது காதல் குழந்தை அதீத காதலால் எதிர்பார்ப்புகளை நிறைத்துக் கொண்டு உன் எல்லா கணங்களும் எனக்கே வேண்டும் என்று அடம் பிடிப்பதின் பின்னணியில் அறிவு என்பது முற்றிலும் இல்லை என்றாலும் காதல் ஆக்ரோஷமாக இருக்கிறது.
உன்னோடு நடந்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் எதிர்ப்பட்ட ஒரு இளைஞனை உன் சிறுவயது நண்பனென்றும் பக்கத்து வீடு என்றும் நீ சொல்லி அறிமுகப்படுத்தியதும் அந்த இளைஞன் உன்னை ஒருமையில் அழைத்து பேசியதும் நீங்கள் வளர்ந்த சூழல் என்று அறிவு சொன்னாலும் ….
அந்த நேரத்தில் ஒரு அரக்கனாய் வெகுண்டெழுந்த உன் மீதான என் காதல் அறிவை அழித்து துவம்சம் செய்து...ஒருமையில் அழைத்து பேசியது தவறென்றும் அதை நீ அனுமதித்தது தவறென்றும் நான் வைத்த வாதத்திலிருந்த அறியாமை அறியாது நீ காட்டிய முகபாவம் எனக்குள் மேலும் எரிச்சலையூட்ட அதே நேரத்தில் சிணுங்கிய என் தொலைபேசியின் மறுமுனையில் என் கல்லூரித் தோழி இருந்ததும் அங்கே ஒருமையில் சினேகம் பாராட்டப்பட்டதும், அதை பின் நீ அறிந்ததும்.....
உனக்குள் இருந்த அந்த எனக்கான காதல் கர்ஜித்து வெளி வந்ததும்...ஏற்கனவே நான் வெளியே அனுப்பியிருந்த என் கோபம் என்ற சிங்கத்துடன் மோத ஆரம்பித்ததும்..........
காதல் மொழி உச்சரித்த உதடுகளில் வக்கிரமான வார்த்தைகளையும் தப்பாமல் கொண்டு வந்து கொட்டியதின் பின்னணியில் நிறைந்திருந்தது ஒரு அத்து மீறிய அன்பு...! காதல் என்ற குழந்தை கேட்பாரற்று அழுது கொண்டிருந்தை தெரிந்தே நமது விவாதமும் தொடர்ந்தது....
எட்டப்படாத முடிவோடு அதீத காதலின் அகம் கொண்டு புறம் நின்ற நமது அகங்காரம் வெற்றி வாகை சூட.....அந்த கடற்கரை மணலை நீ உதிர்த்து விட்டு நகர...நான் விரும்பியே அந்த பரந்த மணல் வெளியில் ப்ரியமுடன் அமர்ந்தேன்.....
வெட்டவெளியாய் விரிந்து நின்ற வானம் புள்ளிகளாய் மனிதர்களை மறைத்துப் போட்டு விட்டு தன் பிரமாண்டத்தை என்னுள் நிறைத்து சிரித்துக் கொண்டிருந்தது. சிந்தனைகள் செரித்து துப்பிய நினைவுகள் எல்லாம் கடற்கரையின் மணல் போல நீயே நிரம்பி இருந்தாய்! மறுக்க மறுக்க வேகமாய் உள் வந்தாய்.....
கடலின் அலைகள் மெளனமாக விளையாடிக் கொண்டிருந்தன கரைகளுடன்.....கால் நிறைத்து நிற்கும் மனிதர்களை கடல் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை...
மணற்பரப்பும் மனிதர்களின் இயக்கங்களை மெளனமாக ஏந்திக் கொண்டிருந்தது....! மனிதர்கள் வருவார்கள் செல்வார்கள்....அவ்வளவில்தான் அதன் புரிதல்....! பிரமாண்டமான கடலின் காதலோ எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் அலைகளோ எதையும் பொருட்ப்படுத்தாமல்... சுகமாய் தொட்டு விளையாடிக் கொண்டு இருந்தன.....!
மனிதன் மட்டுமே எல்லாவற்றின் பயன்பாடும் எனக்கு மட்டுமே என்று நினைக்கிறான் காதல் உள்பட... ! ஒரு காதலனோ காதலியோ வேறு யாரிடம் பேசினாலும்....அல்லது பார்த்தாலும் அதை தங்கள் தனிப்பட்ட காதலுக்கு எதிராய் பார்க்கிறான். மனிதன் ஒரு சமூக பிராணி...சமூகத்தில் தொடர்புகொள்ள வாழ, சக மனிதர்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேவையின் பொருட்டு தொடர்பு கொள்ளல் அவசியமாகிறது.
எப்படிப் பார்த்தாலும் காதல் என்பது தனித்த ஒரு ட்ராக்கில் தான் இருக்கிறது. ஒருவர் மீது காதல் வயப்பட நூறு காரணங்கள் தேவையில்லை...பல நேரங்களில் காரணமே அற்று காதல் மலர்கிறது.
மொத்தத்தில் ஒரு நிஜக் காதல் எப்போதும் தனது காதலனையோ, அல்லது காதலியையோ துன்புறுத்திப் பார்க்காது. எப்போதும் தனது துணையின் ஆனந்தத்தையே விரும்புகிறது….!
வார்த்தைகள் என்னை துரத்திக் கொண்டு வந்து ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும்...சமுதாயம் விதைத்துள்ள சில நச்சு செடிகள் ஏற்கனவே வளரப்பட்டவனாய் நான் இருந்து போனதில் ஆச்சர்யம் இல்லை.
அவளை நான் மட்டுமே நேசிக்க வேண்டும் என்பதில் ஆலமரமாய் என் அன்பு இருந்தாலும் அதன் வலுவில் அவள் துன்பப்படுவாள் என்றால் நான் எனது கிளைகளை ஒடித்துக் கொள்வதுதானே காதல்.
புரிதலின்றி ஏன் தொடரவேண்டும் ஒரு வெற்றுக் காதலை...? என்னிடம் வெளிப்பட்ட அந்த புரிதலற்ற தன்மை எனக்கான ஒரு சூழ்நிலை வரும் வரை அவளிடம் மறைந்துதான் இருந்திருக்கிறது. மொத்தத்தில் காதல் என்ற பெயரில் வேறு ஏதோ செய்து கொண்டிருந்திருக்கிறோமோ என்ற சந்தேகம் விடையாய் வெளியே வந்தது.
கடந்து போன நிமிடங்களில் கலைந்து போயிருந்த காதல் இப்போது தெளிவை உள்ளே கொட்டி நிரப்ப.....வெளுத்திருந்த அந்தி வானமாய் சிவந்து போயிருந்த என் மனது சொன்னது…. காதலை புரிதல் மட்டுமின்றி காதலியையும் புரிந்து கொள்ள வருடங்கள் தொலைக்க வேண்டிய அவசியமில்லை...
ஒரு சில கணங்களில் துளிர்க்கும் நம்பிக்கையே காதல்….!
அதீத காதல் என்று வேடமிட்டு.. நான் அவள் மீது திணித்திருந்தது காதலல்ல… அத்து மீறல்.
என் தொலை பேசி பேச்சுக்கு பின் அவள் வெளிக் கொண்டு வந்து என் மீது திணித்தது அடக்குமுறை. எங்கே இருக்கிறது இங்கே காதல்....? காதல் என்ற முத்திரையிட்டு உள்ளே கிடந்தது....ஒருவரை ஒருவர் அடக்க மேற்கொண்ட யுத்தி...
கடற்கரை முழுதும் காதலர்கள் நிறைந்த அந்த முன்னிரவு கொடுத்த தெளிவு கடற்கரை காற்றாய் என்னை தழுவ.....எதிர்பார்ப்புகளற்ற மனிதனாய் நான் மாற கற்ற பாடமாய் காதல் என்ற பெயரிட்ட ஒன்று கடந்து போனது நிறைவாய் ஒரு தெளிவினை கொடுத்திருந்தது.
காதல் என்ற ஒன்று கொடுத்த உக்கிரத்தில் அவளுடன் நடந்த விவாதத்தில் இறைக்கப்பட்ட கொடும் வார்த்தைகளை காற்று எப்போதோ களவாடி கரைத்து விட்டிருந்தது....
எனக்கான காதலி என்னைப்பற்றிய புரிதலுடன் வருவாள் அதற்கான புரிதலோடு திருத்தப்ட்டவனாய் நானிருக்கிறேன்......! யாராவது வருவார்கள்....ஏன் இல்லையேல் அவளே கூட வரலாம்.....
என்னிடம் புரிதலான காதல் துளிர்த்து இருக்கிறது நான் காத்திருக்கிறேன்......
எதிர்பார்ப்புகளற்ற என் மீது ப்ரியங்கள் கொண்ட அவளுக்காக.....
நான் நடந்து கொண்டிருந்தேன்.....கடலின் அலைகள் கரையை காதலோடு கொஞ்சிக் கொண்டிருந்ததை கிண்டல் செய்த படி ஓடிக் கொண்டிருந்தது ஒரு காற்று......!