எங்கே செல்கிறது என் நாடு?
![](https://eluthu.com/images/loading.gif)
சுதந்திர நாடென்று பேரு
சில நிகழ்வின் போது
சுதந்திரமும் பெற்றோமா என்ற
கேள்வியால் வெட்கக் கேடு
பணநாயகம்
சனநாயகத்தை
விலை பேசுகிறது
விலையும் போகிறது
கொள்ளையனாய் வந்த
வெள்ளையனை விரட்டி விட்டோம்
வெள்ளை ஆடை கொள்ளையர்களை
எப்போது விரட்டப் போகிறோம்?
மலிந்த ஊழல்களில்
மெலிந்து போகாத
அரசு இயந்திரங்கள்
வலிந்த பதவிச் சண்டையில்
நலிந்த நாகரீகம்
ஒளிந்த பொதுநலம்
ஓடி வரும் சுயநலம்
மதுவிற்ற காசில் தான்
அரசு சக்கரம்
நிற்காமல் சுற்றுகிறதாம்..
குடிமகன்களை
"குடி"மகன்களாக்கி
சொல்லின் அர்த்தம்
விளங்கிடச் செய்யும்
ஓட்டு வங்கிக்காய்
ஓட்டை உடைசலானது
கொள்கை கோட்பாடு
ஏழை ஏழையாகவே
வாழ்கிறான் சாகிறான்
பணக்காரன் பணத்தில்
மென்மேலும் கொழிக்கிறான்
நடுத்தரவாதியோ அய்யோ
நடுவில் மாட்டி முழிக்கிறான்
விண்ணில் சீறிப் பாயும்
ஏவுகணைகளைப் போல்
விலைவாசிகளும்
எரிபொருள்கள்
விலை உயர்வில்
பற்றி எரியும்
பொதுமக்கள் வயிறு
தலை நகரிலேயே
பிசுபிசுக்கும் பாதுகாப்பு
நாடெங்கும் துருப்பிடிக்கும்
சட்டம் ஒழுங்கு
சொந்த நாட்டிற்குள்
எல்லை போடும் அவலம்
தாகத்திற்கும் கூட
தண்ணீர் தராத கேவலம்
ஆற்று நீரும்
சுதந்திரமாய் ஓடி வர
சுதந்திரமில்லை
கேட்டாலும் தருவோருமில்லை
நாட்டமைக்கோ
நாற்காலியும் திறமில்லை
குட்டி நாட்டிடம்
குட்டிக் கரணம் போடும்
குரங்கு வித்தையும்
சரியில்லை
இன்னும் இதுபோன்று
எத்தனையோ...
இருந்த போதும்
வல்லரசு கனவில் மிதக்கிறோம்
எங்கே செல்கிறது என் நாடு?