கட்டை விரல்

கட்டை விரல்

குட்டை விரலென எண்ணாதீர்
கூட்டு விரலுக்குப் பிடிமானம்
பட்டையைக் கிளப்பும்
பலவழியில்
பாட்டுக்குத் துணையாம் இசைவழியில்..!

அசைக்க வியலா
தெனஅசையும்
அதுவே வெற்றியில் தலைநிமிரும்
இசைந்து சாயும் நால்விரலில்
இணக்கம் ஆகும் கூட்டுறவில்..!

எழுத்தே அறியா பேர்களுக்கு
இட்டு வைக்கும் கையொப்பம்
கழுத்தை நெறிக்கும் கள்வனுக்கு
கருணை மறந்து கைகொடுக்கும்..!

ஏக லைவன் கதையறிவோம்
ஈந்தான் பெருவிரல்
துரோணர்க்கு
சோகம் கூட்டும் அநியாயம்
துரோக மிழைத்தார் வீரனுக்கு..!

கண்ணில் கண்ணீர் மல்கிட
காணிக்கை யானது கட்டைவிரல்
மண்ணில் வீரன் திறமழிக்க
மடியச் செய்தார்
கட்டைவிரல்..!

கலைஞ னுக்குக் கட்டைவிரல்
கவிஞ னுக்குக் கட்டைவிரல்
இலையென் றானால் என்னாகும்
இலாது போகும் கலையாவும்..!

சிலை வடிக்க வியலாது
சிற்பிக்கு வாழ்வு கிடையாது
மலைபோல் நம்பும் விரலின்றி
மற்றக் கலைகள் வளராது..!

கட்டை விரலைப் போன்றேதான்
கண்டோம் நாமே இல்லத்தில்
கட்டடம் தாங்கும் தூண்களாய்
கருணை மிக்கத் தந்தையை..!

பெருவிரல் போன்றே நண்பர்கள்
பேரிடர் காலக் காவலரே
பேரன்பு தான்துரி யோதனன்மேல்
பித்தாய்க் காத்தவன் கர்ணனே..!

பாண்ட வர்க்குக் கட்டைவிரல்
பாலப் பருவத்தில்
குந்தியே
ஆண்டு கொண்டவள் பெருவிரலாம்
ஆட்சியைப் பிடித்தவள்
திரௌபதியே..!

களை பறிக்கக் கட்டைவிரல்
கனிகள் கொய்யக் கட்டைவிரல்
வளைந் திருக்கும் கட்டைவிரல்
வழுக்கல் போக்கும்
கட்டை விரல்..!

குட்டை விரலால் நெட்டைக்கும்
குன்றா புகழே உண்டாகும்
எட்டா வானைக் கீழிறக்கும்
எழுத வைத்துக் கவிபடைக்கும்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (19-May-25, 9:54 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 3

மேலே