\

"உன்னைப் பழித்தே உருளும் அவர் காலம்"

முதுகில் அடிப்பார்கள் - நீ
மண்ணைக் கவ்வுவாய் என்று,
பின்னால் பிதற்றுவார்கள்,
நாளொரு மேனி, புதுக்கதைகள் கிளப்பி
பொழுதொரு வண்ணம் புதுஎதிரி உருவாக்கி
வேடிக்கைப் பார்ப்பர் நீ வீழ்வாய் என்று.
தெரிந்த எதிரி வேதனை எனில்
பின்னால் பேசும் எதிரி விஷம் .
வேதனையை விரட்டுவாய்; விஷத்தை முறிப்பாய்.

இந்த அடியும் அடிக்கல் - நீ
இமயம் ஏறும் படிக்கல்.

காலில் அடிப்பார்கள் - உன்னால்
ஒருக் "கால் முடியாமல் போனால் என்று
ஐயங்கிளப்பி, பீதி தருவர் பாதி பாதையில்!
இவ்வழி போனால் ஆபத்து என்பர்,
அவ்வழி போனால் விபரீதம் என்பர்
எவ்வழியும் உன் கால் போகாமல் இருக்க
எப்படியேனும் தடுத்திட முயல்வர் - நீ
இப்படியே இருக்கப் பாடாய் படுவர்.

இந்த அடியும் அடிக்கல் - நீ
இமயம் ஏறும் படிக்கல்.

காதில் அடிப்பார்கள் - உன்னுடன்
வாதிடத் துடிப்பார்கள்.
உன்னால் முடியாது என்று ஓர் நாள்
ஏன் இந்த ஆசை என்று மறுநாள் - உன்
ஊக்கத்தை ஊசி கொண்டு குத்திடுவர்.
புதுமுயற்சி நீ எடுக்க முற்படுங்கால்
கஷ்டப்படுவாய் என்று கதைவிடுவர்
நஷ்டப்படுவாய் எ.ன்று நச்சரிப்பர்.

இந்த அடியும் அடிக்கல் - நீ
இமயம் ஏறும் படிக்கல்.

வயிறு எரிவார்கள் - உன்
வயிற்றில் அடிப்பார்கள்.
இல்லாததும் பொல்லாததும் சொல்லி
உன் வயிறு எரியக் குளிர்காய்வர்,
உடனிருப்பர்; உடல் வளர்ப்பர்; உயிர் வளர்ப்பர்
உன்னைப் பழித்தே உருளும் அவர் காலம் .
பெருமைப்படுவர்போல் பொறாமைப்படும்
பெருங்கூட்டம் உன்னைச் சுற்றியுண்டு.

இந்த அடியும் அடிக்கல் - நீ
இமயம் ஏறும் படிக்கல்.

இவர்கள் அடிக்க முடியாத
இடம் ஒன்று உண்டு;
அதுதான் உன்னுடைய
உறுதியான கை - அதன்
மறுபெயர் நம்பிக்கை.
உன் நம்பிக்கை - அது
தன நம்பிக்கை - அதுவே என் நம்பிக்கை.

எழுதியவர் : Everwinner (7-Mar-13, 5:44 pm)
சேர்த்தது : everwinner
பார்வை : 89

மேலே