இப்படியோ! அப்படியோ! நீ எப்படியோ!?
வரம்தரும் வரம்தரும்
வார்த்தைகளாய் இரு!
ஒளிதரும் ஒளிதரும்
தீபங்களாய் இரு!
மணம்தரும் மணம்தரும்
தேன்மலராய் இரு!
கவிதரும் கவிதரும்
பாரதியாய் இரு!
செவிகுளிர வலம் வரும்
இன்னிசையாய் இரு!
புவிசெழிக்க நிதம் பொழியும்
மாமழையாய் இரு!
இரவின்போது அழகு சேர்க்கும்
வான்மதியாய் இரு!
மழையின்போது வண்ணம்தீட்டும்
வானவில்லாய் இரு!
காலைப்பொழுதில் மகிழ்ச்சி கொடுக்கும்
இளங் கதிராய் இரு!
உலகம் நடக்க உதவி செய்யும்
சத்தியமாய் இரு!
எவரும் கேட்டால் உதவி செய்ய
சாத்தியமாய் இரு!
மறந்தும் கூட கோபம் கொள்ளா
புன்சிரிப்பாய் இரு!
தீஞ்செயலை சுட்டெரிக்கும்
தீப்பிழம்பாய் இரு!
மாஞ்செயலை வரவேற்கும்
பூ மாலையாய் இரு!
பார்த்தவுடன் மனம் மகிழும்
புத்துணர்வாய் இரு!
புத்தனுக்கும் காந்திக்கும்
எடுத்துக்காட்டாய் இரு!
அன்பு சொன்ன கடவுளர்க்கு
சேவகனாய் இரு!
இத்தனையும் சேர்ந்திருக்க
தூயவனாய் இரு!