என்றும் வாழுவேனாம் !
கொட்டும்மழை தட்டியிடி மின்னினாலும்
கூடிவருந் தென்றல்புய லாகினாலும்
தொட்டுமழை மண்ணில்வெள்ளம் பொங்கினாலும்
துன்பம் பந்தா யென்னை விளை யாடினாலும்
வெட்டியிரு துண்டெனவே வீசினாலும்
வேளைகண்டு தீயைச்சூழ வைத்துயாரும்
சுட்டெனையே சாம்பலாக்கிக் கொட்டினாலும்
சுந்தரத் தமிழி லென்றும் வாழுவேனாம்
குட்டித் தலை மொட்டையனென் றாக்கினாலும்
கும்மாளந்தான் போட்டுக் கூத்து ஆடினாலும்
பெட்டியிலே வைத்துப் பின்னை சுற்றினாலும்
பெண்கள் வீட்டில் நிற்கவீதி தள்ளினாலும்
தட்டிமீது வைத்துத் தோளில் தூக்கினாலும்
தங்க வண்ணத் தீயிலிட்டு சுட்டபோதும்
பெட்டகத்துள் வைத்த கவிப் புத்தகத்திலே
பேசுந்தமி ழாயிருந்து புன்னகைப்பனோ
கட்டியுடல் கங்கைநீரில் விட்டக் காலும்
கண்ணிழந்து காணுங்காட்சி பொய்த்தபோதும்
சுட்டஉடல் வேகிப்புகை தள்ளினாலும்
சின்னவிழி கண்டு துயர் உற்றபோதும்
வட்டமாக நின்றவர்கள் எட்டப் போயும்
வந்தவனைக் காணவில்லை வையம் என்றும்
விட்டுப் பெரு மூச்சுடனே வீடு சென்றும்
விந்தையென் தமிழ்க்கவியில் வந்துநிற்பேன்
சட்டிதனை ஒட்டைபோட்டுத் தந்தவன் மீண்டும்
சஞ்சலத்தில் வாடும்பொருள் கேட்டபோதும்
வட்டியென்ன கொள்முதலும் நட்டம்போகும்
வையகத்தில் பட்டதொல்லை விட்டதாயும்
முட்ட மூச்சு கட்டியுயிர் எட்டப்போயும்
முத்தமிழின் இன்னிசையில் மெல்லக்காட்சி
இட்டுவெல்லத் தேன்தமிழில் எந்தன்பாவில்
இன்தமிழின் சொல்லடுக்கில் வாழுவேனாம்