தீக்குள் விரலை வைத்தால்

#தீக்குள் விரலை வைத்தால்

நித்தம் பெருகிடும் குற்றங் களைந்திட
நெஞ்சில் வளர்த்திருத் தீயை
கத்திக் கதறினால்
ஆவ தேதுமுண்டோ
கனல் பொசுக்கட்டும் பேயை..!

எட்டி யெட்டிநாம் எட்டியே நின்றிட
ஏற்றங்கள் கண்டிடும்
கொடுமை
எட்டி மிதித்திட இட்டு நெருப்பிட
இன்னல் எரிந்திடும்
உண்மை..!

சாதி சாதியென சாக்க டைகள்பல
சந்து பொந்தினில்
கூவும்
மோது மோதுவெகு மூர்க்க மூர்க்கமென
மூளும் தீயதிலே சாகும்!

கண்ட சுதந்திரம் தேடியே எங்கிலும்
கண்டு பிடிக்கவேத் திரிந்தோம்
நீண்டு போகுமிந்த
காலத்தி லின்னமும்
நிம்மதி தொலைத்து
நலிந்தோம்…!

எத்தர் ரழித்திட அஞ்சியே நின்றிடில்
எப்படி யின்பங்கள் அண்டிடும்..?
மொத்தமாய்க் கூடியே
காட்டுத் தீயாகிட
முள்ளுக் காடுகள்
வெந்திடும்.!

சின்னஞ் சிறுதொழில்
செய்து பிழைத்தவர்
சென்ற யிடமெது சொல்லுங்கள்
கன்ன மிட்டப்பல “கார்ப்ப ரேட்டுகள்”
கலைத்தக் கனவை
வெல்லுங்கள்..!

தீக்குள்ளேவிரல் வைத்தவ ரவரின்
தீமைக ளொழிக்கக் கூடுங்கள்..!
போக்குகள் காட்டியே
பொல்லாங்கு செய்வோரை
போட்டுத் தாக்கலாம் வாருங்கள்..!

பட்ட தாரியின்று
வேலை யின்றியே
பட்டுச் சாய்தலும் விஞ்சுதே..!
விட்டத்தில் தொங்கிடும்
எண்ணம் பொசுங்கிட
வீரம் வளரவர் நெஞ்சிலே..!

காமம் வளர்ப்பவன்
கண்ணிய வானென
கண்ணியை வைத்தவன்
திரிவான்
சாமரம் வீசிடும் பேச்சினில் வீழாது
சாய்க்கத் தணலிடு
எரிவான்..!

தேகத்தில் என்றுமே
செந்தணல் கூட்டிட
தேடித் தொடுபவ ருண்டோ
வேகத்தில் சுட்டிடும் வெந்தணல் நாமென
வீர நடையிடு வெகுண்டே..!

தீயாகி நின்றிட பேயது
அண்டுமோ
தீர்மான மேற்றிடு நெஞ்சிலே
காய்கனி யாகியே கைவரும் நாளினில்
காட்சிகள் கண்களைக்
கொஞ்சுமே..!

பிஞ்சென விருக்கும் போதில் கொடுமையைப்
பின்னமா யாக்கிடக் கற்பாய்
அஞ்சுதல் அகற்றித்
தடைகள் தகர்க்க
அண்டிவரும் வெற்றி உனக்காய்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (28-Dec-24, 9:24 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 7

மேலே