மார்ச் மாதம்
#மார்ச் மாதம்
மகளிர் தினமெனும் நாளுண்டு - அவர்
மாண்பினை உரைக்கும் மாதமிது
வனத்தின்விலங்குகள் காப்பிற்கும்
வனப்பாய் இன்னொரு தினமுண்டு..!
சின்னப் பறவையை சிறப்பிக்கும்
சிட்டுக்குருவி தின முண்டு
வண்ணம் படைக்கும் மாதத்தில்
தண்ணீருக்கும் தினமுண்டு..!
தள்ளு படியில் விற்பனைகள்
தாராளந்தான் மார்ச்சு தனில்
தரங் கெட்ட பொருளும் பணமாகும்
தந்திர வணிகம் விழிதிறப்பீர்..!
ஆண்டுக் கணக்கை நிறைவு செய்யும்
ஆதாய நட்ட முடிவைச் சொல்லும்
இலாபம் என்றால் இன்பந்தான்
இல்லாது போயின் கவலைதான்..!
வரிச் சுமைகள் தலைதூக்கும்
வராத தண்ணிக்கு வரிகேட்கும்
வீட்டின் பழுதினைப் பார்த்ததில்லை - அரசு
விடாது வரியைப் பறித்திருக்கும்..!
பரீட்சை வந்து பயங்காட்டும்
பள்ளிக் கல்லூரி மாணவர்க்கும்
கல்விக் கட்டணம் வலை விரிக்கும்
கசக்கும் வாழ்க்கை தந்தைக்கும்..!
வெய்யில் வெப்பம் சேர்த்திருக்கும்
வியர்வை மணியைக் கோத்திருக்கும்
கதிரவன் கொஞ்சம் சுட்டெரிக்கும்
காலம் மார்ச்சில் கசகசக்கும்..!
வசந்த கால வண்ணத்துடன்
வாசம் வீசும் மாதமிது
வரன்கள் தேடும் காலமிது - மண
வாழ்க்கைத் துவங்கும் நேரமிது
கசப்பும் இனிப்பும் இருந்தென்ன
இனிப்பில் கலப்போம் இதமாக
இன்பம் துன்பம் சமமாக்கி
இன்னல் களைவோம் பதமாக. !
#சொ.சாந்தி