யுகப் புரட்சி
யுகப் புரட்சி
அநியாயம் தலை விரித்து ஆடும்
அதிகாரம் அதற்குத் தூபம் போடும்
எதிராகும் உத்தமர்கள் யாரும்
மதிகொதித்து உருவாகும் போரும்..!
ஆண்டாண்டு காலங்களாய்ப் புரட்சி
அதனால்தான் நாட்டின் மறுமலர்ச்சி
அஞ்சாது எதிர்த்து உயிரும் தந்தார்- இன்றோ
அவர்போலே ஒருசிலர்தான் உள்ளார்..!
பஞ்சத்தோடு சேர்ந்தது பசிக்கொடுமை
பட்டினியால் வாட்டியதே வறுமை
சுவாமி நாதன் தூண்டலிலே அன்று -
புரட்சி
வெடித்ததுபார் பஞ்சந்தன்னை கொன்று..!
வீரியமாய் விதைகளோடு உரங்கள்
அரிக்கும் பூச்சி அழித்திடவே விடங்கள்
புதுமை கண்ட வேளாண்மை யோடு
பசுமைப்புரட்சி கண்டது பார் நாடு..!
சல்லிக்கட்டு ஆட்டத்திற்காய் புரட்சி
கல்விகற்கும் மாணவர்கள் எழுச்சி
மெரீனாவில் பட்ட இன்னல் பலவாய்
ஓற்றுமையில் வெற்றிதானே பலமாய்..!
பொதுநலங்கள் புதைந்துபோன நாட்டில்
புலம்பல்களாய் ஒலிக்கிறதே வீட்டில்
மனத்திற்குள்ளே கிளர்ச்சி எழும் வேகம்
மனையைக் கூட தாண்டாது சாகும்..!
எலும்பிற்கென கால்பிடிக்கும் நாய்கள்
எதிர்ப்போரை மறைந்து தாக்கும் பேய்கள்
இப்படித்தான் எழுச்சியாளர் கேட்டில்
எப்படித்தான் புரட்சி எழும் நாட்டில்..?
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு சொல்வோம்
செயல்பாட்டில் யாவையுமே கொல்வோம்
களமிறங்கி கைகோர்க்கும் காலம்
கயவர் வென்று புரிந்திடலாம் ஜாலம்..!
மந்திரத்தில் கிடைக்காது எதுவும்
உதிரத்தைத் தந்தால்தான் எழுவோம்
சந்ததிக்கு சுதந்திரங்கள் வேண்டும்
யுகப்புரட்சி செய்திடுவோம் மாண்டும்..!
#சொ.சாந்தி