பெண்ணே பெண்ணே

பெண்ணே! பெண்ணே!
நிலவாய் இருந்த‌ நீ
இன்று
"இஸ்ரோ"வின்
புழக்கடை ஆனாய்.
பூந்தோட்டம் பதியமிட‌
புதுக்கணிதம் போடுகின்றார்.
முயல் தெரிந்தது என்றார்கள்.
கரும்புள்ளிகள் ஒவ்வொன்றும்
பருக்கள் என்றான் ஒரு கவிஞன்.
கூன் விழுந்த பாட்டி அங்கே
கூவி அழைப்பது தெரியுதென்றான்.
எத்தனை கதைகள்? எத்தனை கதைகள்?
ஆனாலும்
அழகு சொட்டும் நிலாப்பெண்ணே!
லுனாடிக் அசிலம் என்றார்களே! ஏன்?
இங்கு காதல் என்னும்
கள்ளின் அருவி பெருகியே ஓடும்.
அந்த கற்பனைக்கிறக்கம் அங்கே
கவிதைகளின் "லாவா" ஆகி
நெருப்புப்பிழம்பின் தேன் குழம்பாய்
இனிமைத்தீவு ஆகிய தாலே
விஞ்ஞானம் அங்கே தீண்டிய பின்னும்
பொய்ஞானம் அங்கே போக்குகள் காட்டும்.
உன்னை நோக்கி ஓடிக்கொண்டே
நாங்கள் பாடுவோம்
நிலா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடிவா!
மல்லிகைப்பூக்கொண்டு
மனம் ஒற்றித் தந்திடுவாய்.
என்ன ஏது என எதுவும் அறியோம்.
அங்கு அர்த்தங்கள் இல்லை.
அங்கு தர்க்கங்கள் இல்லை.
ஒரு பக்கம் புன்னகை.
ஒரு பக்கம் புண்ணகை.
வலிப்பது தெரியா சிரிப்பினுக்குளே
காக்கா முட்கள் மயில் போல‌
தோகைகள் விரிக்கும்..கலித்
தொகைகள் உழுதிடும்
வரிகளும் தெரியும்
பதுப்புது புதியாய்
வலிகளும் தெரியும்.
காதல் எனும் பொய்மை கூட‌
காட்டும் ஒளியின் மெய்மை கண்டே
அறுவை மருத்துவர்களின்
மொத்தக் குத்தகையாய்
அனஸ்தீஷியா எனும் மாய வருடல்
நிலவுப்பெண்ணே நிலவுப்பெண்ணே
கிளர்ச்சிகள் ஊட்டி மலர்ச்சிகள் புரியும்.
உன் ஒளி மழை இங்கே
ஓவியம் காட்டும்.
செயற்கை நுண்ணறிவும்
கூர்மை தீட்ட உன் மைவிழி தேடும்.
புரியாத உந்தன் பெருங்கணிதம்
குவாண்ட அலைப்பின்னலையும்
குழப்பிக் குழப்பிச்சிறைசெய்யும்.
குமிழ்ச்சிரிபின் புதிர் நிலவே
அமிழ்தம் பொழிந்து அரவணைப்பாய்!

_________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன்(சொற்கீரன்) (11-Sep-25, 10:58 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : penne penne
பார்வை : 48

மேலே