கண்ணீரில் எழுதிய கவிதை
இனிப்பைத் தேடி வந்த
எறும்பான என் மனதை
காலால் மிதித்துக் கொன்றது விதி!
வசந்தத்தின் வாசல் திறக்குமென நினைத்தேன்
வாடைக்காற்றுப் பட்டு,
வண்ணப்பூவாய் மலர்வேன் என மகிழ்ந்தேன்
இவை அனைத்தும் கண்முன்னே
வெறும் பகல்கனவாய்த் தோன்றி மறைந்தன!
உன்னோடு இருக்கையில்,
கருவறையின் வெட்பத்தை உணர்ந்தேன்
மணவறையின் மகிழ்ச்சியை அடைந்தேன்
ஆனால் இறுதியில்,
கல்லறையின் துக்கத்தை அளித்துச் சென்றாய்...
காகிதப்பூவில் தேனெடுக்கச் சென்ற
வண்டாக நான்...
வெறும் கனவுகள் கலைந்தாலும் பரவாயில்லை
என் வாழ்க்கையே தொலைந்ததை
எங்கு நான் கூற??
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை என்பர்..
எனக்கோ,வாய்க்கு எட்டியும்
வயிறு நிரம்பவில்லை...
மனதோடு முக்காலி போட்டு அமர்ந்துவிட்டது...
தொலைந்தது என் காதல் மட்டுமல்ல..
என் உயிருக்கு இருந்த காவலும் தான்..
இதயமே நொறுங்கியது..
எனினும்,
அதில் செதுக்கியிருந்த
உனது பெயர் மட்டும்
சிற்பமாய் மிளிர்ந்தது...
கவிஞன் பிழையாக எழுதி,
கிழித்துக் கசக்கி எறிந்த காகிதம்தான் நான்,
என்னைவிட சிறந்த கவிதையை நீ வடிக்கலாம்..
ஆனால்,
என் மீது பட்ட உன் கைரேகையை
யார் வந்து அழிப்பது?
என் கண்ணோரம் வழியும் உதிரத்தை
யார் வருந்தித் துடைப்பது?
நீ கூறிய ஒரு வார்த்தையில்
பிரிந்து போன என் உயிரை
யார் வந்து பெற்றுக் கொடுப்பது??
எனக்குத் தெரியும்...
உனக்கும்கூட தெரியும்...
உன்னைத் தவிர
வேறு யாராலும் அது இயலாதென்று...
உன்னை எதிர்பார்த்து,
நீ வரும் வழி தேடி
காத்து நிற்கிறேன்..
விரைவில் வந்து
உயிரற்ற என் உடலுக்கு
உயிர் கொடு...