என்னப்பற்றி...... பகுதி 19
கதிரவனைத் தொழும்
தமிழர்களுக்கும்
கதிர் அறுக்கக் காத்திருக்கும்
உழவருக்கும்
விடியல் தரவேண்டியது
நடுவண் அரசு.
அது
இடும் கட்டளையோ,
தொழ வேண்டியது
ஆட்சியில் இருக்கும்
இவர்களின் கால்களை
என்றும்,
அறுக்க வேண்டியது
என் உழவனின்
மனைவி கழுத்தில்
தொங்கும் அந்த
மஞ்சள் கயிற்றை
என்றும்தானே?
விடியல் வரும் என்று
ஏங்கி தவிக்கும்
என் உழவனின் கண்ணீர்,
காவிரியை கடக்கும்
என்றால்
ஏளனம் பேசுகிறது
கர்நாடக அரசு --
அந்த கண்னீரை வைத்தே
பயிர் வளர்க்கவாம்!
அதே கண்ணீரை
கர்நாடகத்திற்கு
திரும்ப அனுப்ப
அதிக நேரம் ஆகாது
என் தமிழ் உழவனுக்கு!
வாழ வைப்பவன் தமிழன்!
வாழ்வை அறுப்பவன் அல்ல!
கதிர் அறுப்பவன் உழவன்!
கழுத்தை அறுக்க
துணைபோவன் அல்ல!
பகுத்தறிவை போதித்த
தாடிக் கிழவனை
தன் மூதாதையனாகக்
கொண்டவன் தமிழன்.
அவன்
உணர்ச்சியால்
பொங்கி எழுவானே அன்றி
உக்கிரத்திற்கு சென்று
வக்கிரச் செயல்புரிய
ஒருபோதும் ஒப்பாமாட்டான்!
வறுமைக்கு ஆளானாலும்
வன்முறைக்கு இடம்தராமல்
நீதி மன்றம் ஏறி நின்று
நிலை நாட்டினான் தன்
உரிமையை அழுத்தமாக!
உதறல் எடுத்தது
கர்நாடக அரசுக்கு.
கரிகாலனையும் மிஞ்சும்
செயற்கை அணைகள் கட்டியது
பிரச்சினைகளை அடுக்கி
காவிரியை தடுக்க
நடுவண் அரசிடமும்
உச்ச நீதி மன்றத்திலும்!
நீதி
நிலை நாட்டப்பட்டது.
பகுத்தறிவு வென்றது.
மென்மை போராட்டமும்
உரிமை கொண்டாட்டமும்
உயரே தூக்கி பிடித்தான்
என் தமிழ் விவசாயி.
காவிரியை
கொண்டு வந்தது
தமிழக அரசு
அரசிதழில் வெளியானது
அறிக்கையும் ஒன்று
நடுவண் அரசால்
காவிரி நீர் பற்றி.
ஆறு வழிப் பெற்றிட
அறவழிப் போராட்டமும்
அன்பு நெறியும்
ஒருங்கே கொண்டான் தமிழன்.
பெருமிதம் கொண்டது என்மனம்!
வரண்ட வரப்பில் இருந்து
அகலத் துணிந்தேன்.
யோசனை வந்தது
தடுமாறின கால்கள்.....
எங்கு செல்ல?
யாரும் எனக்கு திசை சொல்வீர்களா.....?
வழிகாட்டுவீர்களா?
இன்னும் சொல்ல ஆசை ..."என்னைப் பற்றி......."
என் பெயர் மங்காத்தா......