என்னைப்பற்றி .....பகுதி 18

சுற்றி வந்தேன் தமிழ்நாட்டின்
சில இடங்களை

மீனவர் அவலம் கண்டேன்.
கண்ணீர் கடலாகக் கண்டேன்!

அந்த கண்ணீர்,
யாரும் விரும்பாத
உப்புக்கடலாக இருப்பதைக்
கண்டேன்.

மருத்துவக் கூடம் சென்றேன்.
அங்கே,
சமுதாயத்தின் அவலம்
அமிலமாக இருக்கக் கண்டேன்.

மூச்சுத் திணறலுடன்
வெளியே வந்தேன்.

சுவாசக்காற்றை சீராக்க
எண்ணி
வயல்கள் பக்கம் சென்றேன்.

அங்கே கண்ட காட்சியை
இங்கே சொல்கிறேன்
கேளுங்கள்.

"தைமகளே வருக" என
ஒரு கூட்டம் பாடக் கேட்டேன்.

விலைவாசி உயர்வின் அழுத்தம்
தற்காலிகமாய் மறந்து
சேர்த்து வைத்த கனவுகளை
பொங்கலாகப் பொங்கி

கவலைகளை மறக்கடிக்க
உற்சாகத்தை
வாடகைக்கு வாங்கி
அதை
நிரந்தரமாக்கும் முயற்சியில்

தைமகளே வருக என
கூடிப் பாடி ஆடும்
மக்கள் மனம்
மழலையாவது கண்டேன்!

வீடெங்கும் தோரணம்
வீதியெங்கும் மேளதாளம்
சாதி என்னும் பேதமின்றி
தமிழர் மனம் உற்சாகமாய்
திளைக்கக் கண்டேன்.

பாடல்கள் பலர்
இயற்றக் கண்டேன்.
பரிசுகளுக்கும்
ஆர்வம் கண்டேன்.

இன்னும் சற்றே
உலாவ மனம் வந்து
சுற்றி திரியும்
நிலை கொண்டேன்.

அங்கே
உழவின்றி உலகில்லை
எனக் கொண்டாடும்
கூட்டம் கண்டேன்.

தமிழர் வாழ்வு என்பது
உழவை நம்பி இருப்பது.

இதை
உலகறிய பறைசாற்றும்
ஆர்வம் கண்டேன்.

அணிவகுத்து நின்று பல
அரிய அடிப்படைகளை
அனைவருக்கும் அளிக்கும்
படைப்புகள் தரும் பல
அற்புத உள்ளங்கள் கண்டேன்.

இவைகளை ரசித்துக் கொண்டே
மேலும் சென்றேன்.

உழவும் உழவனும்
மரணத்தின் விளிம்பிலே
எனப் பாடும் ஒலி கேட்டேன்.

அயற்சி வந்தது
அங்கேயே அமர்ந்தேன்.
காய்ந்த வரப்பு அது

காலாற நடக்கவும்
மனமில்லை!

ஆம்.

பாரமாகிய மனதுக்கு
இந்த துக்கத்தை சுமக்கும்
பலம் இல்லாமல் போனது

காவிரியின் தண்ணீர் கேட்டு,
கண்ணீர் விட்டு வளர்த்த பயிரை

செந்நீர் விட்டு பாதுகாக்க

செங்கோட்டை வரை
சென்றும்
தீராத
அவலம் கண்டேன்.

கைவிரித்த கர்நாடகாவை
கண்டிக்காத நடுவண் அரசின்
மெத்தனப் போக்கு கண்டேன்.

என் உழவனின் கண்ணீரை
தத்ரூப வரிகளில் தந்த
எழுத்துலக அன்பர்கள் கண்டேன்

விடியல் பிறக்குமா
என் உழவர் பெருமக்களுக்கு?


இன்னும் சொல்வேன்


என் பெயர் மங்காத்தா......

எழுதியவர் : மங்காத்தா (23-Mar-13, 3:14 pm)
பார்வை : 108

மேலே