நிலவின் வருணனை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளச்சீர் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
(1, 3 சீர்களில் மோனை)

வெண்நிற நறைநிறை வெள்ளம் என்னவும்.
பண்நிறம் செறிந்திடை பரந்த தென்னவும்.
உள்நிறை காமம்மிக்(கு) ஒழுகிற்(று) என்னவும்.
தண்நிறை நெடுநிலாத் தழைத்த(து). எங்குமே! 1

- உண்டாட்டுப் படலம், பால காண்டம், இராமாயணம்

பொருளுரை

வெண்மையான நிறமுடைய கள்ளின் நிறைந்த வெள்ளம் (பெருகியது) போலவும்;
இசையானது வடிவம் பெற்று உலகத்தில் இடையே பரவியது போலவும்;

(எல்லா உயிர் இனங்களின்) உள்ளத்துள்ளே நிரம்பிய காமம் (உள்அடங்காமையால்) மிகுதிப்பட்டு வெளியிலே ஒழுகினாற் போலவும் குளிர்ச்சி பொருந்திய பெருநிலாவானது எல்லாவிடத்தும் (தன் ஒளியைச் செழிக்கச் செய்தது).

நிறத்தால் கள்; இனிமையால் இசை; இன்ப மிகுதியால் காமவெள்ளம் என்னலாம்படி நிலவொளி பரவிற்றென்க!

எழுதியவர் : கம்பர் (27-Nov-24, 4:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே