சின்னுவும் நானும்

எங்களுக்கும் ஆசை வந்தது
ஒரு மாடு வளர்க்க.
வாரக் கணக்கான கற்பனையை
நொடியில் சிதைத்தவாறு
வாசலில் குரல் கொடுத்தது
சோனியான ஒரு மாடு
ஒரே மாதத்தில் பால் கறக்கும் என்ற
எழுதாத உத்திரவாதத்துடன்.

முழு கவனிப்பும்
முத்தம்மாள் பொறுப்பு எனினும்
விடுமுறைக் காலங்களில் மட்டும்
சின்னு என் பொறுப்பு.

ஒத்துக் கொள்ளச் செய்திருப்பேன்
கத்திரி வாத்தியாரையும்
மாடு மேய்க்கும் தொழில்
அவ்வளவிற்கு சுலமானதில்லை
என்ற என் அனுபவப் பாடத்தை.

வருடங்கள் இரண்டு கடந்தும்
பால் சுரக்காத மடியும்
பற்றாக் குறை பட்ஜெட்டும்
பரிந்துறைத்தது
சின்னுவை உடனே விற்று விட..

மூன்று நாள் கழித்து
மாணிக்கம்தான் சொன்னான்
போன இடத்தில்
சின்னு இறந்து விட்டதாக.

திடீர் சாவின் காரணம்
தெரியவில்லையாம் எவருக்கும்.
எங்களுக்கு தெரிந்த காரணத்தை
யாரிடம் கூறி நாங்கள் ஆறுதல் பெற?.

எழுதியவர் : பிரேம பிரபா (5-Apr-13, 11:51 am)
பார்வை : 110

மேலே