"இருப்பியல்" (existentialism)

அறிவு அனைத்துக்கும்
பிறப்பிடம் மனமே
புறமனம் அகமனம்
இரண்டுக்கும் இடையே
வித்தியாசம் இருந்திட
சாத்தியம் இலையே

இத்தனை அழகான
தத்துவம் அதுவே
இருப்பு இயலெனும்
கருப்பொருள் கூற்றே
வருந்திமெய்ப் பொருளை
அறிந்திட ஆய்ந்திடின்

மனதில் தோன்றும்
எண்ணப் பொறியது
கனவாய் விரிவது
காதலாய் மலர்வது
அகமும் புறமும்
ஆசையில் துடிப்பது.

ஒருவன் இருந்திட
ஒருத்தியும் இருந்திட
உள்மனம் அவளை
உற்று நோக்கிட
வெளிமனம் கண்ணால்
வெறித்துப் பார்த்திட

அவளுக்கும் அப்படி
அங்கு நிகழ்ந்திட
அகவை இருவர்க்கும்
நன்கு பொருந்திட
காதலிது வென்று
புத்தி சொன்னது

மனதில் மேகமா
புத்தியில் மோகமா
இரண்டுக்கும் அப்பால்
கெட்ட எண்ணமா?
இல்லவே இல்லை
இருப்பு இயலது.

மறுபடி ஒருமுறை
சிந்தித்துப் பார்க்கின்
அவள் இருக்கிறாள்
அவனும் இருக்கிறான்
இருவரும் இங்கே
இருக்கும் இயல்பதை

தத்துப் பித்தென
தத்துவம் ஆக்கியும்
பொத்தியே பெண்ணை
முத்தென வளர்த்தும்
பொத்தெனக் காதல்
பொதிந்தது எப்படி?

பொழுது போக்கவா?
போகின்ற பாதையா?
பாதையில் வழுக்கலா?
வழுக்கலின் இழுக்கா?
இழுக்கது சாபமோ?
சாப விமோசனமோ?

வெது்வெதுப்பு தரும்
வெள்ளந்திக் காதல்
பள்ளத்தில் நம்மை
தள்ளி விடாது!
கள்ளமில் காதலில்
உள்ளுவது உயர்வெனின்
உள்ளத்தில் இன்பமே
உறுதியாய் மிஞ்சுமே.!.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (12-Apr-13, 5:32 pm)
பார்வை : 89

மேலே