நம் அந்த நாட்கள்
புதைந்த நாட்களை மீண்டும் தோண்டுகிறேன்,
முடிந்த விடியலை மீண்டும் தேடுகிறேன்,
நான் தோண்டுவதும் தேடுவதும் உனைத்தானடி,
தெரிந்தும் தனிமையில் எனை வதைப்பதும் ஏனோ..
வழி தெரிந்தும் தொலைந்து போகிறேன்,
வலிகளிலே கரைந்து போகிறேன்,
உன் விழித் திரையில் எனைக் காண்கிறேன்,
என் வாச வளியாய் உனை ஏற்கிறேன்..
தனிமையில் இன்று வாழ்கிறேன்,
உன் துணையில்லாமல் வீழ்கிறேன்,
நீயிருந்த இடத்தை இன்று,
காற்றால் கூட நிரப்ப முடியவில்லையே..
அன்று வீக்கலெடுத்த போதினிலே,
முத்தமிட்டு எந்தன் தொண்டை நனைத்தாய்,
வீடு வந்த பின்னரும்,
விடை பெற முடியாமல் வண்டியில் அமர்ந்தாய்..
நான் அடிபட்ட நாட்களில்,
நீ அழுகை பற்றிக் கிடந்தாய்,
வெளியூர் விடைபெற்ற நாட்களில்,
விரைந்து வா என்றாய்..
நாம் நடந்த பாதை முடிந்ததும் ஏனோ,
நாம் கடந்த பாதையை நான் மறவாததும் ஏனோ,
முடிந்த உறவுகளைக் கேட்டுப் பார்,
மூடி வைத்த சோகங்கள் ஆயிரம் சொல்லும்..
அன்று, வீசும் காற்றை ஏவி விட்டு,
உன் முத்தத்தை அதில் தூவி விட்டாய்..
இன்று, அந்த நாளை எண்ணி விட்டு,
ஏக்க மெத்தையில் வீழ்ந்து கிடக்கிறேன்..
என் நிழலாய் நீயிருந்தாய்,
உன் நிஜமாய் நானிருந்தேன்,
நிழலும் நிஜமும் சேர்வது தான் நியதி,
அந்த விதிக்கு நாம் மட்டும் விதிவிலக்காவது ஏனோ. .
என்னவள் நீ அகண்ட போதிலும்,
அழகான பெண்ணவள் ஒருத்தியோடு
வாழ்ந்து வருகிறேன்..
"உன் நினைவுகள்"
என்று பெயர் கொண்ட பெண்ணொருத்தியோடு..