பெண் பாவம்
சில்லென்று முகம் இடித்து செல்லமாக வருடும் தென்றலே,
என்கிருந்து வந்தாய் நீ? எங்கென்று செல்வாய் நீ?
புலம் பெயரும் பொழுதினிலே புதுக்கேள்வி கேட்பவரே!
வல்லங்கள் வரி கிழிக்கும் கேரளத்து கடற்கரையில்
பிறந்தெழுந்து புவி நிரைத்த பூங்காற்று நானாவேன்...
உதித்தெழுந்த கரையினிலே உள்ளூரான் திமிர் கொள்ள
களவாட இருந்த என் கற்பை நான் காத்துக்கொள்ள
அமைதியும் அறமும் அகழியாய் காத்து நிற்கும்
அன்னை தமிழகத்தை ஆசையுடன் நாடி வந்தேன்
நாடி வந்த உன் குறளில் நடுக்கம் நான் காண்பதென்ன?
பேதையாய் விழித்திருந்த தென்றலிடம் நான் கேட்க...
வந்தாரை வாழவைக்கும் வானுயர்ந்த தமிழகமோ,
என் செய்வேன் எனை இங்கு யாவரம் செய்துவிட்டால்?
அறியாத ஆறறிவே, அரிவை நிலை நீ அறியாய்*/
காத்து நின்ற கற்பதனை கணாமல் செய்து விட
கானகத்தின் கருநரியாய் அலைகிறது ஆடவராய்.
தேசியமே தலைநகரில் பெண்ணழிந்த கோரத்தில்
மடவை தம் பண்பழிக்கும் மாக்கள் தம் மாநிலத்தே
வாழ்ந்து வீழ்ந்து தேய்ந்தொழிய தெரிவைக்கு திராணியில்லை...
பிறந்தவிடம் விரையும் வரை பிழையற்றோள் என்றிருந்தால்
பரமன் அவன் பாதம் கீழ் பனித்திடுவேன் என் நிலையை
காற்றாக இருக்கும் உன்னை களவாடல் காரியமா?
குழலே!
எழிலே!
சிற்றறிவில் சிக்கவில்லை நீ சொன்ன சங்கதிகள்.
விஞ்ஞானம் மெய்ஞானம் திரித்திருக்கும் மாமனிதா!
கம்பரும் கபிலரும் வரித்து வைத்த வினை இது தான்,
பெண்ணுக்கு உவமையாக,
காற்றெங்களை உருவகமாக்கி,
பாடிப்பாடி எங்களையும் பெண்ணாக்கி விட்டனரே புலவர் தம் பெருமக்கள்.
இந்நிலையில் நீடித்தால் பெண்ணழியும் காலம் வரும்,
மடந்தை தீர்ந்து போனவர்க்கு என்பாலும் மய்யல் வரும்,
என் செய்வேன் இனி நானும், எனை பெண்ணாய் வரித்துவிட்டான்!!!

