சொற்களின் மரணம்

நம் கடைசி சந்திப்பிற்கு
மௌன சாட்சியாக இருக்கிறது
உதட்டுக் கரையுடன்
இரண்டு காப்பிக் கோப்பைகள்.

சொற்கள் மரணித்த
அந்தப் பொழுதில்
வெற்று வெளிகள்
நீண்டுகொண்டே போக
ஆழ் மௌனத்தின்
அவதியான அரவம்
உடலைச் செதுக்கியபடி
வளைந்து செல்லும்
கால சர்ப்பத்தின் தேடுதலென
நீள்கிறது

சொற்களுடன் நாம் பயணித்த
பரிச்சயமான பாதைகள்
ஒரு நிழற்படமென
நம் இருவரின் முன்னும்
நீள்கிறது
அடிவானத்தில் மறையும்
ஒரு சாலையைப் போல.

வெற்றுடல் போர்த்தி
அடை காக்கும்
இரவுப் பாசறையில
தனித்து நிற்கிறோம்
தவிப்புடன்
ஒரு யாசகனைப்போல்
நாம் இருவரும் தனித்தனியே.

சொற்களின் மரண தேகம் பற்றி
முத்தமிடத் துடித்த நமக்கு
பரிசாகக் கிடைக்கிறது
கொஞ்சம் மௌனமும்
மேலும் மறு வாசிப்பிற்கான
ஒரு சந்தர்ப்பமும்.

எழுதியவர் : பிரேமா பிரபா (21-Apr-13, 5:11 pm)
பார்வை : 180

மேலே