பரிசுக்குரிய பாட்டாளிகள்!

தரிசு நிலமான பெரும் பாலையும்
அரிசி நிலம் மாக்கியவன் தொழிலாளிதான்
வருசமதில் வருகின்ற மே தினத்தில்
பரிசமிட்டு பரிசளித்து கௌரவிப்போம்.

காடு வெட்டி வேர் களைத்து மண்ணை கொத்தி
காட்டுகின்ற கரிசனையின் பலனால்தானே
வாட்டுகின்ற வேளையிலே வயிர்நிறைத்து
ஓட்டுகின்றோம் உயிர் என்னும் தேரை நாங்கள்?

சேறு,என்றும் சகதி என்றும் பாராவாறு
சோறு தின்னும் சாதி தினம் வாழவேண்டி
வீறு நடை கொண்டு தினம் உழைப்பவர்கள்
பேறுதனை மிஞ்சிவிட வேறாளுண்டோ?

வெயில்,மழையை கூட தினம் துச்சமாக்கி
வயல் வெளியில் கூடி நின்று உரமாயாகி
உடல் வருத்தி உழைக்கின்ற இவர்களை விடவும்
உயர்ந்த குலம் வேறொன்று உலகிலுண்டோ?

ஆகையினால் அகிலமுள்ள நாங்களெல்லாம்
வாகையென கூடி இந்த மே தினத்தில்
வியர்வை சிந்தி உழைக்கின்ற தொழிலாளர்கள்
வேதனைகள் போக்கி பெரு விருதளிப்போம்!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (2-May-13, 12:02 pm)
பார்வை : 107

மேலே