கழிவு வாழ்க்கை

கண்களுக்குள்
சிக்கிக்கொண்டு உறுத்துதே
கழிவுகளைச் சுமக்கும் சமுதாயம்
காணொளி எதற்கு ?
என் கருமணிக்குள் கலகம்
திரையிட்டுக் கொள்ளவே விருப்பம்
செவிவலி நோயெனக்கு
பொய்களும் மெய்களும்
ஒன்றையொன்று விஞ்சிடும்
அறப்போரின் ஒவ்வாமையாலே
சுவாசிக்க மறுத்தேன்
கரடுமுரடாய் மாறிப்போன
வளிமண்டல வீதிகளில்
உயிர்மூச்சு தேடி அலைய
கரியமில வாயுக்கு கேலியானேன்
மாசும் தூசும் துரத்திட ஓடினேன்
ஒன்றை பத்தாக்கும்
இல்லாததையும் பொல்லாததாய்
மாற்றிக் கூத்தாடும் உலகம்
வாய் திறக்க மறுத்தேன்
ஊமையாகிப் போனேன்
பிறவிகொண்டேன்
மானுட பந்தத்தில் அரிதாய்
தெரியவில்லை எனக்கு
வாழ்வதெப்படி ?
வழி சொல்லும்படி தவிக்கிறேன்
பாவத்தின் சம்பளமாய்
பூலோகவாசிப் பிரஜையானேன் !
மெய்தனில் கலப்படம்
பொய்தனில் ஓடும் படம்
இரண்டுக்கும் நடுவே
ஓர் பயணம் இறுதிவரை
ஓ என் மனிதகுலமே
ஒளிந்து கொள்ளாதே
கேள்விகள் கேட்கவே வந்தேன்
பதில்களைத் திருத்தாதே
சாக்கடையில் விழுந்தேன்
நாற்றமுடன் எழுந்தேன்
மதிகெட்டு மானங்கெட்டு
திரியும் வாழ்வினிலே நானும்
ஒரு பங்காய் பிரிக்கப்படேன் !