சுவாசமே காதலாக ...! தொகுப்பு - 8

உன்னை விட்டு பிரிந்து சில வருடங்களாகி விட்டன. கல்லூரியின் இறுதி நாளில் நீ என்னோடு செய்த தர்க்கங்களோடும் நான் உன்னோடு பேச மறுத்த தருணங்களோடும் கலைந்து போன அந்த கடைசி நாள் இன்னும் என் நெஞ்சில் இருக்கத்தான் செய்கிறது. காதலென்றால் என்னவென்று இன்று கேட்பவர்களுக்கு அன்றைய உன் கண்களைக் காட்ட ஆசை கொள்கிறேன்.. ஆனால் இயலாது....
ஊமைக் கண்ட கனவு போல, இறைவனைக் கண்ட மனிதன் போல பகிர முடியாத அந்த காட்சிதான் பெண்ணே... இன்னும் என்னைக் கொன்று கொண்டிருக்கிறது. காதலை எதார்த்தத்துக்குள் புகுத்தி அதை வாழ்க்கையாக்க நீ முயன்று கொண்டிருந்தாய் நானோ எதார்த்தத்தில் நின்று கொண்டு காதலே வேண்டாம் என்று என்னுள் வார்த்தைகளை மென்று கொண்டிருந்தேன்.....
நிச்சயம் என்னை தேடிவருவேன் என்றாய் அதற்கு என் வீட்டு முகவரி உனக்கு உதவுமென்று எனக்குத் தெரியும் ஆனால் வாழ்க்கையின் ஓட்டம் எங்கே என்னை இழுத்துப் பிடித்து கொண்டு வந்து நிறுத்தும் என்று எனக்குத் தெரியாது. மழலையாய் நான் விசுவரூபமெடுத்து, என் முன்னால் நின்று கொண்டிருந்த வாழ்க்கையை கண்டு மிரண்டு போயிருந்தேன்... ! நீயோ காதல் கொடுத்த உத்வேகத்தில் ஒரு ராட்சசியாய் எனக்கு காதலை புகட்டிக் கொண்டிருந்தாய்..
என் மூன்றாமாண்டு முடியும் தருணத்தில் உன் இரண்டாம் ஆண்டு கல்வி என்னை கட்டிப் போட முயன்று கொண்டிருந்தது. எனக்கான உன் கடிதங்கள் எல்லாம் அக்கவுண்டன்சி பேப்பரில் ஒரு ஒரு குயர் புத்தகமாய் நீ கொடுத்திருக்கிறாய்....! நான் தான் காதலையும் வாழ்க்கையையும் கூட்டிக் கழிக்கத் தெரியாமல் உன்னை விட்டு விலகுவது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.....!
நீ அழுதாய்
நான் அதிர்ந்தேன்
நீ கோபமானாய்
நான் கோழையானேன்
நீ காதலால்...என்னை
கட்ட முயன்றாய்
நான் வாழ்கையைச்
சொல்லி தப்பித்தேன்
இதோ பிரிந்தே விட்டோம் ஷோபனா...!
உருண்டோடிய காலங்கள் ஏதேதோ எழுதிக் கொண்டிருந்தது என் மூளையில்...! கல்லூரி முடித்த கையோடு சென்னைக்கு வந்த என்னை முரடனாய் சென்னை மிரட்டியது, நுனி நாக்கு ஆங்கிலமும், பகட்டு வாழ்க்கையும் கொண்ட பலர் என் முன்னே வந்து வந்து சென்றனர்.....
என் மேற்படிப்பில் உனை மறக்கடிக்க போதும் போதுமென்ற அளவிற்கு பூக்கள் கலர்க் கலராய்.....
தூரங்களில் ரசிக்கப்படும்
வண்ணப்பூக்கள்.......
பல நேரங்களில்.. வசீகரிக்கும்,
மனம் மயக்கும், கிறங்கடிக்கும்
தொட்டுவிடலாம் என்று
நெருங்கிப் போனால்
அவை கலரான காகிதங்களாய்
பல் இளிக்கும்...!
எனைக் கடந்து சென்ற காகிதப் பூக்களில் வர்ணங்கள் இருந்ததேயன்றி ஜீவன் இருக்கவில்லை. எல்லாம் செய்யும் காலம் எங்கேயோ என்னைத் தூக்கிச் சென்று ஏதோ உத்தியோகத்தில் வைத்தது.....! ஒரு தாதாவாய் என்னை மிரட்டிய வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து ஒரு குழந்தையாய் ஆகிப் போயிருந்த சமயம்...
என் பைக்கின் ஆக்ஸிலேட்டர் முறுக்கிய ஒரு மாலைப் பொழுதில் அழைத்த கைபேசியை நான் கவனிக்காமல் விட்டு விட்டு அடுத்த முறுக்கலுக்கு முன் அழைப்பு ஒலி கேட்டு அழைப்பினை அழுத்தி என் தொலைபேசிக்கு உயிர் கொடுத்து ஹலோ என்று சொன்ன கணத்தில் என் உயிர் போனது யாருக்கும் தெரியாது.
என் ஹலோவுக்கு மறுமுனையில் ஹலோ சொன்ன குரல்.. எனக்குள் ஊடுருவிப் பாய்ந்து...இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையை உலுக்கி விட்டு... இதயத்தின் வேகத்தை அதிகரித்து....ஒரு திருவிழாவே நடத்திக் கொண்டிருந்தது அந்த ஒற்றை வார்த்தை... ஒற்றை வார்த்தைக்கு சொந்தக்காரி.. ஷோபனா..
இவள் பேசினாளா? இல்லை ஒரு தூண்டிலை வார்த்தையில் கோர்த்துவிட்டு என் இதயத்தை கொக்கி போட்டு இழுத்தாளா? என்ற யோசனையில் இருந்த போதே பக்கம் பக்கமாய் கண் முன்னே விரிந்தது அவளின் அக்கவுண்டன்ஸி காதல் கடிதங்கள்...
" என் பெயர் சொல்லி
நீ முதன் முதலாய் அழைத்த போது
காதலால் நான் சூல் கொண்டேன்..."
அவள் எழுதிய வரிகள் அனிச்சையாய் என்னுள் ஞாபங்களைக் கிளறிவிட....திணறலாய்.. " ஷோபனா....என் நம்பர் உனக்கு எப்படி? நீ எங்க இருக்க? எப்டி இருக்க? என்ன செய்ற? யார் நம்பர் இது? " கேள்விகளை எல்லாம் சடுதி நேரத்தில் அவள் செவிகளுக்குச் சேர்த்த பொழுதில் சரெலென்று சிரித்தாளா? இல்லை பளீச் சென்ற ஒரு மின்னலாய் ஒளிர்ந்தாளா..? என்னைக் கேட்காமல் என் மூளை அதிக பிரசங்கித்தனமாய் ஒரு சாலமன் பாப்பையா ஸ்டைலில் பட்டிமன்றம் போடத் தயாரானது....
நான் மீண்டு வந்தேன்...! தொழில்நுட்பம் உச்சமாயும், தொடர்புகள் எல்லாம் விரிந்து பரந்திருக்கும் உலகில் என்னடா கேள்வி கேக்குற? உன்னை பிடிக்கிறது என்ன அவ்ளவு கஷ்டமா? என்ற கேள்வியை பதிலாய் எனக்கு அனுப்பி விட்டு அவள் சிரித்திருக்க கூடாது. அந்த சிரிப்பில் நானும் கலைந்திருக்க கூடாது.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்க்கை பெரிதாய் மிரட்டிய தருணத்தில் காதல் எனக்குள் வருவேனா என்று அடம்பிடித்திருந்தது. இன்று வாழ்க்கை ஓட்டத்தின் மேடு பள்ளங்கள் ஓரளவு விளங்கி நகரும் பொழுதில் காதலை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது மனது.
அவளை விட்டு விலகியிருந்த மூன்று வருடத்தை நான் உத்தியோகமாகவும், எம்.பி.ஏ. பட்டமாகவும் மாற்றியிருந்தேன்... அவள் அதை எம்.காமாக மாற்றி விட்டிருந்தாள்.....! இன்னும் என்னை காதலித்துக் கொண்டிருப்பாளா..? ஆயிரம் பெண்கள் வாழ்வின் ஓட்டத்தில் வந்து போயிருந்தாலும்....முதல் காதலாயிற்றே?
தகுதிகள் வரும் முன்னே காதலை தகுதியாக்கிவள்தானே அவள்....? மனம் கூட்டிக் கழித்து காதலைப் பகிர வெட்கம் கொண்டு...தத்தி தடுமாறி...பார்மாலிட்டி பேச்சுக்களில் ஓடிக் கொண்டிருக்க.....
" ஸ்டில் யூ ஆர் லைக் தட் டா.....யூ ஆர் இன் த சேம் ஸ்பீட்...." சொல்லியவளின் தொலைபேசிச் சேவை திருச்சிராப்பள்ளியிலிருந்து வந்ததென்றும், ஏதோ புரஜக்ட் செய்வதாகவும், ஒரு ஸ்பின்ஸ்டர் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாளென்றும் தெரிந்து கொண்டேன்...
இப்போதே பைக்கை முறுக்கி திருச்சி....மெயின் கார்ட் கேட்டை தொடமுடியுமா என்று மனம் துள்ளல் போட்டுக் கொண்டிருக்க.....அவள் எனக்காக எழுதிய வரிகளை...
" இதழின் வழியே
என் உயிர் ஊற்றி
உன் உடலின் வழியே
எனை மாற்றி...
பேசாத கதைகள்
எல்லாம் மெளனத்தில் பேசி
மோனத்தில் மயங்கி..
உன்னில் நான் மறையும்
பொழுதில் மெதுவாய்
துளிர்க்கும் ஞானம்தான்...
அத்வைதம்! "
அவளிடம் சொல்லிக்காட்டிய பொழுதில் என் பின்னே அசுர கதியில் ஹாரன் அடித்த ஒரு லாரிக்காக மேலும் பைக்கை ரோட்டை விட்டு இறக்கி....சைடு ஸ்டாண்ட் போட்டு சாவகாசமாய் அவளின் மறுமொழிக்காக காத்திருந்தேன்...
ஷோபனா சிரித்தாள்..."யூ ஹேவ் கிரேட் மெமரி... சோ ஸ்டில் என்னை நினைச்சுட்டு இருக்கியா" அவள் கேட்டாள்....
மறக்க முடியா
நினைவுச் சுவடுகள்தானே
ஞாபகங்கள்....!
நீ இல்லாத என் ஞாபகங்கள்
அலைகள் இல்லா கடல்தானே? "
நான் சொல்லி முடித்தேன்.. அவள் சிரித்துக் கோண்டிருந்தாள்...! இன்னும் காதலோடு இருக்கிறாய்.. குட் பாய்....என்றவள்...! என் கடைசி நேர நிராகரிப்புகளை வடுக்களாய் சுமந்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள்....
நான் மெளனமாயிருந்தேன்....! வேண்டாமென்று ஒதுங்கி வந்தவன் மீண்டும் வேண்டும் என்ற ஒரு நிலைக்கு வந்தது உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியாய் படர்ந்திருந்தது.
கடந்த காலத் தடங்களை மீண்டும் எடுத்துக் கொண்டு அவளிடம் என் உணர்வுகளைப் பகிர நான் நினைத்த பொழுதில் அவள் உதிர்த்த வார்த்தைகள் என்னை சடென் பிரேக் போட்டு நிற்க வைத்தன. சலமனற்று அவளின் வார்த்தைகளை கவனித்துக் கொண்டிருக்க வேண்டிய சூழலை எனக்குக் கொடுத்திருந்த காலம் மெளனமாய் என்னைப் பார்த்து புன்னகை செய்வதாய் உணர்ந்தேன்.....
அடுத்த மாதம் அவளின் திருமணத்திற்கான நாளை அவள் வீடு குறித்திருந்ததை அதிராமல் சொல்லி விட்டு ஒரு நீண்ட பெருமூச்சோடு.. ஒரு இடைவெளியை அவள் விட்ட போது...அந்த இடைவெளியில் குறையில்லாமல் நிறைந்திருந்தது நம் காதல்தானே ஷோபனா? என்று அவளிடம் கேட்க நினைத்து கூட்டுக்குள் தன்னை இழுக்கும் நத்தையாய் என் வார்த்தைகளை உள்ளிழுத்துக் கொண்டேன்....
" என் முதல் காதல் நீ.. என் முதல் நேசம் நீ..! நீ என்னை மறுத்த போதும் உன்னை நேசித்தேன்...நேசிக்கிறேன்....நேசிப்பேன்....! இடைவெளியற்று மீண்டும் அவள் பேசிக் கொண்டிருந்தாள். பொய்யில் எதுவும் சாத்தியமில்லை ஆனல் நிஜம் என்ற ஒன்றில் எல்லாமே சாத்தியம் என்று உணர வைத்தாள்...
மீண்டும் ஒரு முறை என்னை திருமணம் செய்வாயா? என்று கேட்டு உன்னை தடுமாற வைக்க கூடாது என்று என் காதல்தான் தடைபோட்டது என்று அவள் சொன்னது காதலின் உச்சமாய் எனக்குப்பட்டது. எல்லோரும் திருமண அழைப்புதான் வைப்பார்கள்.. அவள் என்னை அவள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று சொன்னதின் பின்னாலும் காதல்தான் விசுவரூபமெடுத்து நின்றது.
அவள் பேசிக் கொண்டேயிருந்தாள்.....
" என் வாழ்க்கையில் திருமணமும் அதனால் வரும் பந்தங்களும் அத்தியாவசியமானவை..என்னால் தவிர்க்க முடியாது ஆனால் அதற்காக எனக்குள் தோன்றிய ஒரு காதல் செத்துப் போய்விட்டது என்ற கூற்றினை என்னால் எப்போதும் ஒத்துக் கொள்ள முடியாது. நித்தியமாய் நீ இருப்பாய் உன் நினைவுகளும் இருக்கும். இது நான் மணமுடிக்கப் போறவனுக்கு செய்யும் துரோகம் என்று.....உலகம் சொல்லும் ஆனால்.. என் காதலுக்கு நான் செய்யும் நியாயம் என்று என் மனசாட்சி சொல்கிறது....
உன்னை காணாமலேயே இருப்பேன்....இன்னும் 5 வருடங்களில் 3 குழந்தைகளுக்குத் தாயாகவும் இருப்பேன்..நம்பிக்கையான வாழ்க்கைத்துணையாக என் கணவனுக்கும் இருப்பேன்...ஆனால் உன் மீதான என் முதற்காதல் போய்விட்டது என்று பொய் சொல்ல மாட்டேன்...நீ இருப்பாய் உன் நினைவிருக்கும்....
அடுத்த பிறவியில் சேர்வோம் என்ற அற்பப் பொய்களை எல்லாம் சினிமா டையலாக்கோடு நிறுத்தி விட்டு எதார்த்தத்தை நேர்மையாக எதிர்கொள்வோம்....! உன் திருமணத்தன்று எனக்கு நீ சொல்கிறாயோ இல்லையோ...ஆனால் நிச்சயம் என்னை நினைப்பாய்தானே....? அதன் பெயர்தான் காதல்...! உடலோடு சம்பந்தப்படாமல் நாம் நேசிக்கும் எல்லாமே காதல்தான்...உடல் வரும்போதுதான் அங்கே சுயநலங்கள் உயிர்த்துக் கொண்டு உண்மையை அழித்து விடுகின்றன......"
அவள் சொல்லி முடித்து விட்டு பிரமாண்டமாய் நின்றாள்.....! எல்லாம் சொல்லி விட்டு கல கலவென்று அவளால் சிரிக்க முடிந்தது என்றால்...அது அவளின் தேர்ந்த ஞானம் என்று மட்டுமே என்னால் கொள்ள முடிந்தது.....
" வாய்ப்பிருந்தால்... என் வாழ்க்கைத்துணை என்னை அனுமதித்தால்....மீண்டும் பேசலாம்....! ஆனால்..உன்னுள் இருக்கும் என் மீதான காதலையும்...என்னுள் இருக்கும் உன் மீதான காதலையும்....இல்லை என்ற பொய்யை நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டாமே....."
பேசி முடித்து வெகு நேரமாய்... என் கைபேசியை பார்த்துக் கொண்டே நான் பைக்கில் அமர்ந்திருந்தேன்.....மெளனமாய்.....
ஏன் போனாள்...? ஏன் வந்தாள்.....? மீண்டும் எங்கே போனாள்....? இருப்பாள் ஆனால் இல்லை...இருக்கும் ஆனால் இல்லை.....
சிரித்துக் கொண்டே கிக்கரை உதைத்தேன்....ஒற்றை உதையில் உயிர் பெற்றுக் கொண்டது அந்த எந்திரம்....!ஆக்ஸிலேட்டரின் முறுக்கில்....எகிறிப் பாய்ந்தது....
காற்று என்னைத் தழுவ...என்னையறியாமல் ஏனோ ஒரு பாடலை முணு முணுக்கத் தொடங்கியிருந்தேன்....
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
(இன்னும் சுவாசிப்போம்....)