இனி ஒரு விதி செய்வோம்..!
சிற்றின்பப் பேய்கள் நடுவே
சிக்குண்டே சிதையும் பெண்டீர்
தப்பென்றே தெளிந்த பின்னும்
மக்கென்றே இருப்பதேனோ ..?
ஆதிக்கச் சிந்தைகொண்டு
அருவருக்கும் வார்த்தை பேசி
அடியெடுத்து நெருங்குவோனை
அடித்தொழிக்கத் தயக்கமேனோ ..?
பெண்மை தனை காவுகொள்ள
பெண்ணியம் பேசி நிற்கும்
பொய்யர்களைப் புடைத்திடாது
பொறுமை இன்னும் காப்பதேனோ..?
துகிலுரியும் வேளைதன்னில்
காத்திடவே கண்ணனில்லை
மாற்றாரை நம்பியே - பெண்மை
மடைமையிலே திளைப்பதேனோ..?
தனக்கென்று இடர் வந்தால்
புழுகூட போராடும்
புத்தி கெட்ட பெண்ணினமே
சக்தி தனை மறைப்பதேனோ ..?
தூற்றியே உனை இங்கு
துச்சமென மிதிக்கையிலே
அக்கினியாய் எரிக்காமல்
அழுது கண்ணீர் வடிப்பதேனோ ..?
நெஞ்சத் துணிவுகொண்டால்
துன்பத் தஞ்சமென்றுமில்லை
அஞ்சித் தேயும் பெண்ணே
இக்கணமே துணிந்துவிடு ..!