கனவுகளை மேய்ப்பவர்கள்

மேய்ச்சல் நிலம் தேடி
என் கருப்பு நிற எருமைகளை
மேய்த்துக்கொண்டு நானும்
உங்கள் வெள்ளை நிற பசுக்களோடு
நீங்களும் வந்து சேர்ந்தோம் ....

என் மாடுகளும்
உங்கள் மாடுகளும்
காடுகளிலும் மேடுகளிலும்
ஒன்றோடு ஒன்று கலந்து
ஒன்றாக மேய்ந்தன ...

பசலை பாய்ந்த குளங்களில்
முங்கி எழுந்தன

அடர்ந்த மரங்களின் நிழல்களில்
குழுக்களாய்த் தங்கி
அசை போட்டன...

புழுதி மண்ணிலும் கொழி மண்ணிலும்
வறள் மண்ணிலும்
கொம்புகளைத் தோய்த்து
மண்ணின் நிறங்களையெல்லாம்
உடம்பெங்கும் அப்பிக்கொண்டன ..


செம்புலப் பெயல் நீரின்
செவலை நிறத்தையும்
அந்திப் பொழுதின்
ஆரஞ்சு நிறத்தையும்
மேனியெங்கும் பூசிக்கொண்டன..

பூசியிருந்த ஒளியின் நிறத்தை
பூமி கலைத்து
இரவின் இருளை பூசத்தொடங்கிய
அந்த கருப்பு இரவு தொடங்கிய நேரத்தில்
வானத்தைப் பொத்துக்கொண்டு
தாரை தாரையாய் விழுந்த
தண்ணீர் நிறத்தில்
அத்தனை நிறங்களும் அழிந்து
அதனதன் சுயத் தன்மையோடு நின்றன ...

பின்,
கலைந்து சென்று
அவரவர் மாடுகளை
அவரவர் பட்டிகளில் அடைத்தோம்
அதனதன் சுய நிறத்தோடு !

எழுதியவர் : மருத பாண்டியன் (21-May-13, 7:01 pm)
சேர்த்தது : maruthu pandian
பார்வை : 59

மேலே