நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

நம்மை மீட்டும் வீணை !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் ,சென்னை .

நம்மை மீட்டும் வீணை ! நூலின் தலைப்பே நம்மை மீட்டி விடுகிறது .சிந்திக்க வைக்கிறது .வீணையை நாம்தானே மீட்ட வேண்டும் .வீணை நம்மை எப்படி? மீட்டும் .சிந்தித்தபோது .இந்த நூல் படித்தால் படித்த வாசகரும் ஹைக்கூ கவிதை எழுத வைத்து விடும் என்பதை உணர்த்துகின்றதோ! என்று நினைத்தேன் .இதற்கான விடையை ஒரு ஹைக்கூ வாகவே வடித்துள்ளார் .

கையில் ஏந்தினால்
நம்மை மீட்டும் வீணை
புத்தகம் !

புத்தகம் பற்றிய இவ்வளவு அருமையான விளக்கம் இதுவரை யாரும் சொல்லவில்லை .

.நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி அவர்கள் மரபுக்கவிதை , புதுக்கவிதை , ஹைக்கூ கவிதை முப்பா வடிப்பதிலும் வல்லவர் .ஏற்கெனவே நூல்கள் எழுதி பல பரிசுகளும் , பாராட்டுகளும் பெற்றவர் .ஓய்வு பெறும் வயது வந்தபோதும் , ஓய்வின்றி தனியார் விடுதியில் மேலாளராக உழைத்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வரும் நல்லவர் .இவர் புறத் தோற்றம் கருப்பாக இருந்தாலும் ,அகம் மிக, மிக வெள்ளையானவர் .இனிய மனிதர் .தள்ளாத வயதிலும் தளராத தேனீ .சமுதாயத்தை உற்று நோக்கி நெஞ்சில் துணிவுடன் நேர்மைத் திறத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார் .

ஹைக்கூ கவிதைகளின் வீச்சை உணர்த்துவதாக நூல் உள்ளது .அட்டை முதல் அட்டை வரை அனைத்து ஹைக்கூ கவிதைகளும் பிடித்து இருந்தாலும் அணிந்துரையில் அனைத்து ஹைக்கூ கவிதைகளும் குறிப்பிட முடியாது என்ற காரணத்தால் மிகவும் பிடித்த சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அரசியல்வாதிகள் மாறி மாறி இவர் அவரை ஊழல் என்பதும் ,அவர் இவரை ஊழல் என்பதும் தினசரி செய்திகள் .இதனை உற்று நோக்கி எழுதிய ஹைக்கூ ஒன்று .

திருடன் திருடன் என்று
தெருவெல்லாம் அலறல்
திடுடனும் சேர்ந்து !

இந்த யுகத்தில் உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத அளவிற்கு மிகப் பெரிய தமிழினப் படுகொலை இலங்கையில் நடந்தது.மனிதாபிமானத்துடன் கண்டிக்க வேண்டியவர்கள் கல் நெஞ்சத்தோடு இன்னும் கண்டிக்காமல் , தண்டிக்காமல் இருக்கிறார்கள் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

ஈழத்தமிழர் நிலை கண்டு
இதயம் துடிப்பதில்லை
இருந்தால்தானே துடிக்க ....

இயற்கையைப் பாடுவதில் ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய கவிஞர்களுக்கு தமிழ்க் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறை சாற்றும் விதமாக உள்ள அழகியல் பாடும் அழகிய ஹைக்கூ .

வெள்ளிக் காசுகளை எடுக்காமல்
விலகி விலகி ஓடுகிறாள்
விசித்திர நிலவுப் பெண் !

அரசியல்வாதிகள் கோடி கோடியாக கொடி பிடித்து கொள்ளை அடிப்பார்கள் .ஊழல் வெளியே தெரிந்து கைது செய்ய காவல்துறை வரும் நேரம் நெஞ்சு பிடித்து படுத்துக் கொள்ளும் நிகழ்வை கவனித்து வடித்த ஹைக்கூ .

நோயற்ற தலைவர்
மருத்துவமனை படுக்கையில்
முன் ஜாமீன் வாங்க !

அருவியை எல்லோரும் பார்த்து இருக்கிறோம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்திஅருவியை பார்க்கும் பார்வை மிகவும் வித்தியாசமானது .

கின்னஸ் சாதனைதான்
பல்லாயிரம் மீட்டர் பட்டுத்துணி
மலையருவி !

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ ஒன்று மிக நன்று .

ஆண் பல்லி கத்தினால்
பெண் பல்லி மகிழ்ச்சி
மனிதனுக்கேன் மிரட்சி !

ஆற்றில் தண்ணீரை பன்னாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடித்து விற்று
கோடிகள் சேர்க்கின்றனர் .ஆற்று மணலை உள்நாட்டு தாதாக்கள் கொள்ளை அடித்து விற்று கோடிகள் சேர்க்கின்றனர் .ஆறுகள் எல்லாம் கொள்ளை போய் காணாமல் போவதை கண்டு கொதித்து எழுதியுள்ள ஹைக்கூ .

காணாமல் போன நதிகளை
கண்டு பிடித்தேன்
வரை படத்தில் !

மூட நம்பிக்கை காரணமாக அட்சய திதி என்ற பெயரில் நடந்த பகல் கொள்ளைக்கு பலர் பலியானார்கள் .மூட நம்பிக்கைச் சாடி நெற்றிப் பொட்டில் அடித்தாற்ப் போன்ற ஹைக்கூ .

அட்சய திதி ராசியில்
பகலில் அமோக விற்பனை
இரவில் கடையில் கொள்ளை !

உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

உதடுகள் ஒட்டாக் குறளை
உச்சரித்தேன்
ஒட்டியது உள்ளத்தில் !

அணிந்துரையில் அதனை ஹைக்கூவையும் எழுதி விடுவேனோ! என்ற அச்சத்தில் இத்துடன் முடிக்கிறேன் .மற்றவை வெள்ளித் திரையில்காண்க ! உள்ளே நூலில் காண்க .
நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளை படியுங்கள் .மின்னலை உணருங்கள் .அதிர்வுகளை பாருங்கள் .மின்மினிகளை ரசியுங்கள் .துளிப்பாக்களை சுவையுங்கள் .வாமனப்பாவின் வீச்சை அறியுங்கள் .தேவையற்ற பகுதிகளை நீக்கிட சிலை உருவாகும் .தேவையற்ற சொற்களை நீக்கிட ஹைக்கூ உருவாகும் .சுண்டக் காய்ச்சிய பாலாக சுவைக்கும் .ஹைக்கூ அனுபவம் சொல்லால் விளக்க முடியாது .நீங்களே உணருங்கள் ..நூலைப் படித்து முடித்தவுடன் நீங்களும் ஹைக்கூ படையுங்கள் .



--

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (28-May-13, 9:14 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 203

சிறந்த கட்டுரைகள்

மேலே