எழுத்து ஓர் கலை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
எழுத்து ஓர் கலை !
நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
திருவரசு புத்தக நிலையம் 13.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .,17
விலை ரூபாய் 30
எழுத்தாளர் ஆக வேண்டும் .கவிஞர் ஆக வேண்டும் .படைப்பாளி ஆக வேண்டும் .என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல் .சராசரி வாசகர் கூட இந்த நூல் படித்தால் படைப்பாளி ஆகி விடுவார் .அந்த அளவிற்கு படைப்பின் ரகசியம் சொல்லித்தரும் நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் கவிதை ,கதை ,கட்டுரை ,நூல் விமர்சனம் எழுதிடும் சகலகலா ஆற்றல் மிக்கவர் என்பதால் ,படைப்பு உலகில் தான் சந்திந்த அனுபவங்களை வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் பகிந்து உள்ளார்கள் .
.
எழுத்தாற்றல் கலை கைவரப் பெற்ற காரணத்தால் ,வளரும் படைப்பாளிகளுக்கு படைப்பின் சூத்திரத்தை சொல்லித்தரும் விதமாக கட்டுரைகள் வடித்துள்ளார்கள் .
" எழுது எழுது என்று என்னை எபோதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இப்புத்தகம் சமர்ப்பணம் "
என்று அவர்களை எழுதிட ஊக்கப்படுத்தியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வித்தியாசமாக காணிக்கை ஆக்கி உள்ளார்கள் .
ஹைக்கூ உலகில் அறிய பல கட்டுரைகள் வடித்து வரும் இனிய நண்பர் பேராசிரியர் முனைவர் இராம .குருநாதன் அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது .அதிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு .
.
"திருமதி விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் படைப்பாளர் ,கட்டுரையாளர் கவிஞர் இம்முத்திறக் கூறுகளும் நன்கு புலனாகுமாறு தம் நூலைப் படைத்தளித்துள்ளார் ."
நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் என்னுரையில் அவரது அருமை மகன் திரு .திருஞானசம்பந்தன் அவர்கள் " IF YOU CAN TALK , YOU CAN WRITE "என்ற நூலை பரிசளித்ததான் காரணமாக இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் ஆர்வம் வந்து எழுதத் துவங்கினேன் .என்று குறிப்பிட்டுள்ளார்கள் .பரிசளித்த நூலின் பெயரே பல கட்டுரை செய்திகளைச் சொல்லும் விதமாக உள்ளது .
நூலில் 20 தலைப்புகளில் படைப்பாற்றல் பயிற்று விக்கும் விதமாக முத்திரைக் கட்டுரைகள் வடித்து உள்ளார்கள் . "எழுத்தும் ஒரு வித சமையல் கலையே " . முதல் கட்டுரையிலேயே மிக வித்தியாசமாக எழுத்தையும் சமையலையும் ஒப்பீடு செய்துள்ளார்கள் .
" எதோ சுவைபட எழுத வேண்டும் என்பதற்காக ,மனநலத்தைக் கெடுக்கக் கூடிய கதைகளை எழுதக் கூடாது ." இந்த கருத்தில் நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களின் சமுதாய அக்கறை புலப்படுகின்றது .எதையெல்லாம் எழுதலாம் என்று நூலில் பட்டியல் இட்டு விட்டு, அதோடு நின்று விடாமல் எதை எழுதக் கூடாது என்பதையும் அறிவுறுத்தியது சிறப்பு .மகாகவி பாரதியார் கவிதைகளை பொருத்தமான இடங்களில் மேற்கோள் காட்டி உள்ளார்கள் .கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது .
எழுத்தை இசையோடு ஒப்பிட்டு எழுத்துக்கும் ஏழு சுரங்கள் உண்டு என்கிறார் .எழுத்துக்கு ஏழு சுரங்களா ? என்று வியப்பில் ஆழ்த்துகிறார் .அவரே ஏழு சுரங்கள் எவை என்று விளக்கி உள்ளார்கள் .
சிந்தனை ,செயல் ,தாகம் ,வேகம் ,விவேகம் ,விவாதம் ,வெறி .இந்த ஏழு சுரங்களை எழுத்தாளர்களாகிய நாம் நம் எழுத்தில் தகுந்த கலவையில் சேர்த்தால் ,எத்தனை
எத்தனையோ படைப்புகளை உருவாக்கலாம் ."தாகமும் வேகமும் எழுத்தில் சேரும்போது பேனா கூட அரேபியக் குதிரைபோல் பேப்பரில் ஓடும் ."இதில் உள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மை நானும் ஒரு படைப்பாளி என்பதால் நன்கு உணர்தேன் .பயனுள்ள தகவல்கள் .
படைப்பாளியின் எண்ணத்தில் ஒரு கருத்து உருவானால் உடன் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .பிறகு எழுதலாம் என்று நினைத்து , தள்ளிப் போட்டால் .மறந்துவிடும் .எழுத நினைத்ததை எழுத முடியாது .படைப்பாளிகளுக்கு வகுப்பு எடுப்பதுபோல மிக தெளிவாக பல யுத்திகளை எழுதி உள்ளார்கள்.பாராட்டுக்கள் .
படைப்பாளிகள் எப்போதும் சிறிய கையேடும் எழுதுகோலும் வைத்தே இருப்பது நல்லது .எனக்கு அதிகாலை 4 மணிக்கு விழிப்பு வந்தது .அப்போது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் கஷ்டம் நினைவிற்கு வந்தது .உடன் எழுந்து எழுத ஆரம்பித்து விட்டேன் .மிக நன்றாக வந்தது .உடன் இணையத்திலும் முக நூலிலும் பதிப்பித்தேன் .படித்த பலரும் பாரட்டினார்கள் .உண்மை சொல்வதென்றால் பல வருடங்களாக எழுதி வரும் எனக்கு பல யுத்திகளை கற்றுத் தந்தது இந்த நூல் .
. நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் எழுத்துலக வாழ்வில் சந்தித்த அனுபவங்களை விரிவாக எழுதி உள்ளார்கள் .எழுதுவதில் அச்சம் வேண்டாம் துணிந்து எழுது ! என்று ஊக்கப் படுத்தி உள்ளார்கள் .மேல் நாட்டு அறிஞர்கள் நூல்கள் பல படித்து எழுத்துக்கலை பற்றி அவர்கள் சொன்ன அறிய விளக்கங்களை அழகு தமிழில் வழங்கி உள்ளார்கள் .எழுதியவுடன் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் .தோல்வி வந்தால் இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் .என்று ஜென் தத்துவங்கள் போல பல அறிவார்ந்த கருத்துக்கள் நூலில் உள்ளன .முயற்சி ,பயிற்சி இருந்தால் எழுத்தில் முத்திரைப் பதிக்கலாம் என்று பயிற்றுவித்துள்ளார்கள் .
மனதை பாதித்த ,கண்ணால் கண்ட விசயங்களை கற்பனை கலந்து கதை எழுதலாம். எண்ணியதை எண்ணியதோடு நின்று விடாமல் எழுத்து ஆக்கினால் சமுதாயத்திற்கு உதவும் .நமக்கும் பெயரும் ,புகழும் கிடைக்கும் .
மகாகவி பாரதியார் பஞ்சிலி சபதம் முன்னுரையில் குறிப்பிட்டதை நூலில் எழுதி உள்ளார்கள் .
" எளிய பதங்களை எளிய நடை ,எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு "
பாரதி சொன்ன விளக்கம் இந்த நூலிற்கும் பொருந்தும் விதமாக எழுதி உள்ளார்கள் .
--