நடை பிணங்கள்
நடை பிணங்கள்..
18 / 02 / 2025
ஆடி அடங்கிய பிணத்தை
ஆடியபடி தூக்கிச்
செல்கிறதடா
ஆடி அடங்கப்போகும்
நாளைய பிணங்கள்
சூடு இருக்கும்வரை
சூடாய் இருந்துவிட்டு
சூடு தணிந்தபின்
சில்லென்று கிடக்குதடா
பிணவறையில்
நாடிநரம்புகளில்
முறுக்கு இருக்கும்வரை
முறுக்கிக்கொண்டு
இருந்த உடல்
சறுக்கிக்கொண்டு
கிடக்குதடா மூங்கில்பாயில்
கால்போன போக்கில்
சுற்றிய கால்கள்
கால்கட்டு போட்டு
காலடிங்கி கிடக்குதடா
காலில்லா கட்டிலில்
வாயில் வந்ததையெல்லாம்
வாய்நிறைய பேசிய
வாய் இன்று
வாய்கரிசிக்காய்
வாய் திறந்து
கிடக்குதடா இடுகாட்டில்
வதை செய்து மற்றவரை
வதை செய்த பூதவுடல்
சிதைக்குள் எரியுதாடா
சுடுகாட்டில்
இத்தனையும் தினம்
கண்டாலும்
ஆணவம் அடங்காமல்
அலையுதாடா நாட்டில்
நடை பிணங்கள்