பற்களே பலமாய் இருங்கள்

#பற்களே… பலமாய் இருங்கள்

பிறக்கும் போது
இறைவன் நமக்களிக்கவில்லை.

பால்குடி குழந்தைக்கு
பல் எதற்கு என்று
விட்டுவிட்டாரோ என்னவோ கடவுள்..!

தாய் நலன் கருதி கூட
பல்லின்றி படைத்திருக்கலாம்..!

பற்கள் இல்லாத போது
ஊனம் என்று எவரும் சொல்வதில்லை..!

பால்பற்கள் இறந்தாலும்
மீண்டும் பிறந்துவிட
இறைவன்
ஒரே ஒரு வாய்ப்பினை
அருளுகின்றான்..!

முன் பற்களை விடவும் எனக்குக் கடைவாய்ப் பற்களைத்தான்
அதிகம் பிடித்திருக்கிறது..

முறுக்கு சீடை கடிக்கவும்,
நண்டு கறியுணவு
வகைகளைச் சுவைக்கவும்
கடைவாய்ப் பற்கள் உதவுவது போல்
வேறெந்த பற்களும்
உதவுவதில்லை..!

அவயங்கள்
எடுப்பாக இருந்தால்
அழகென்பார்கள்..
பற்களுக்கு
அந்த பாக்கியம் இல்லை..!

பால்யத்தில்
கூடுதலாகிக் கொண்டே போன பற்கள்
முதுமைக்குத் துணை நிற்க மறுத்து
குறைந்து கொண்டே
வருகிறது ..!

பல் போனால்
சொல் போய்விடுமாம்..
ஓசைக்கு கொஞ்சம்
இடர்பாடுகள்தான்.!

பல் தேய்க்காவிடின்
பல்லுக்கு ஆபத்தாம்
மனிதர்களுக்கு மட்டுமாய்..!

பற்களைத் தேய்க்காத
விலங்கினமே உங்களுக்குச் சொத்தை
விழுவதே இல்லையா..?

கேள்வி கேட்டாலும்
எந்த மிருகம்
பதில் சொல்லிவிடப்
போகிறது..!?

சொத்தைப் பிடித்து விட்டால்
"சுள் " என்று மண்டைக்கு
ஏறும் வலியை விடவும்
அதைப் பிடுங்கி எடுக்கவோ
அல்லது
செயற்கை ஏற்பாடு களுக்கு
சொத்தைக் கொஞ்சம்
மருத்துவருக்கு
கூலியாக அளிக்கும்போது
வரும் வலி
மிகக் கொடியது..

சொத்தையைப் பிரித்து
சொத்து சேர்க்கும்
கும்பல் பெருகித் தான்விட்டார்கள்…!

அவர்களுக்கு
சொத்து சேர்க்க
எனது பாழாய்ப் போன பற்கள் உதவியிருக் கின்றன..!

இதோ புறப்பட்டுக்
கொண்டிருக்கிறேன்..
எனது செலவில்
மருத்துவருக்கு வரவு வைக்க…

ஏனோ… இந்தப் பற்களை
இப்போதெல்லாம்
எனக்குப் பிடிப்பதில்லை…

உங்களுக்கும் ஓர் நாளில்
என்போல்
பிடிக்காமல் போகலாம்..

ஹி..ஹி..ஹி…

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (17-Feb-25, 10:41 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 17

சிறந்த கவிதைகள்

மேலே